நிமேஷ் சத்சர – பதுளையில் இருந்து கொழும்பிற்கு வேலைதேடி வந்த ஒரு இளைஞன். ஆரம்பத்தில் ஒரு வணக்கஸ்தலத்தில் தங்கியிருந்து, பின்னர் நடிப்பு தொடர்பான பயிற்சிகளை பெற்று, வேலை தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன். 2025 ஏப்ரல் 1ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஆனால், மறுநாள் அந்த இளைஞனை பார்க்க வந்த தாயாருக்கு பொலிஸார் கூறிய பதில், “மகன் இறந்துவிட்டார்”.
நிமேஷ் சத்சர என்ற அந்த இளைஞன் கைதுசெய்யப்பட்ட பின்னர் குழப்பமான நிலையில் செயற்பட்டதாகவும், தலையை சுவற்றில் மோதிக்கொண்டதாகவும் குறிப்பிட்ட பொலிஸார், அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.
இலங்கையில் பொலிஸ் காவலில் உயிரிழந்த முதலாவது இளைஞன் இவரல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், தனது மகனை பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைசெய்துள்ளதாக தாயார் கூறியுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதானது, நாட்டின் சட்ட அல்லது சட்ட ஒழுங்கு கட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்துகின்றது.
சித்திவதை குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், புதிய மரண பரிசோதனைக்காக நிமேஷ் சத்சரவின் உடல் நேற்று (23.04.2025) தோண்டியெடுக்கப்பட்டது.
பொலிஸ் காவலில் நிகழ்ந்த மரணங்கள்
2020-2023 ஆண்டுகாலப் பகுதியில் மாத்திரம் பொலிஸ் காவலில் உள்ளோர் மரணித்த 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
* தாரக பெரேரா (2021): அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல்நாள் இரவு, அப்போதைய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றது.
* நாகராசா அலெக்ஸ் (2023): சித்தங்கேணியைச் சேர்ந்த 25 வயதான இந்த இளைஞன் தாக்கப்பட்டு, மூச்சுத் திணறி, மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தார்.
* ஜனித் மதுஷங்க (2021): பொலிஸ் காவலில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த கொலை நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
* மாபுலகே தனித் மெலன் (2021) : தடுப்பில் இருந்த தன் பிள்ளையை காணவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்த மறுநாள் இச்சம்பவம் நடந்தேறியது.
இவை அனைத்தும் சித்திரவதையுடன் சம்பந்தப்பட்டவை. ஆனால், நிமேஷ் சத்சர போன்று, இவற்றிற்க வேறு கதைகளே கூறப்பட்டன. இவை தொடர்பான நியாயமான விசாரணைகள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன.
சட்ட அமுலாக்கத்திலுள்ள குறைபாடுகள் அல்லது தாமதங்கள்
சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தப்படுகின்றமைக்கு எதிரான 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், சித்திரவதை ஒரு குற்றமாகும். ஆனால், இதற்கு எதிரான தண்டனைகள் அரிதாகவே உள்ளன.
ரத்நாயக்க தரங்க லக்மாலி எதிர் நிரோஷன் அபேகோன் (2020) போன்ற முக்கியமான நீதிமன்ற வழக்குகள், பொலிஸ் காவலில் நிகழும் மரணங்கள் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தோடு, இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பொலிஸார் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் அல்லது இடமாற்றம் செய்யப்படுகின்றனரே தவிர, தண்டனைகள் வழங்கப்படுவதில்லை.
இன்னும் எத்தனையோ இவ்வாறான மரணங்கள் நிகழ்ந்துள்ள போதும், ஆயுதங்களை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தம்மை சுட முயன்றதால் சுட்டுக்கொன்றோம் என்ற வழமையான கதைகளை எத்தனையோ தடவைகள் பொலிஸார் கூறிவிட்டனர்.
2010 ஆம் ஆண்டு கைதி ஒருவரை சித்திரவதை செய்தமைக்கு அப்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட தேசபந்து தென்னகோனே பொறுப்பு என, 2023 டிசம்பர் 14ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருட்டுச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ரஞ்சித் சுமங்கல என்பவரை, மனிதாபிமானமற்ற ரீதியில் ஏனைய இரண்டு அதிகாரிகளும் சேர்ந்து சித்திரவதை செய்ததாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. மூச்சுத்திணறும் வரை தாக்கியமை, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி துவியமை போன்ற விடயங்கள் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டன. இந்த தீர்ப்பு வெளியான சந்தர்ப்பத்தில், தேசபந்து தென்னகோனின் பதவி நிலை உயர்ந்து அவர் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோதும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பதவியில் நீடித்தமையானது, இலங்கையின் சட்டவாட்சியின் உறுதியற்ற தன்மையை மற்றும் பொறுப்புக்கூறலில் உள்ள இடவெளிகளை எடுத்துக்காட்டுகின்றது.
தேசபந்து மீது இவ்வாறான பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு, அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பிரதிபலனாகவே அவர் தற்போது பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
செய்யவேண்டியவை
உடலில் பொறுத்தப்படும் கெமராக்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுயாதீனமாக பிரேத பரிசோதனை செய்தல் போன்ற பரிந்துரைகள் இன்னும் செயற்படுத்தப்படவில்லை என, 2023ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அறிக்கையில் தெரிவித்திருந்த்து.
நிமேஷ் சத்சரவின் வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கையாள்வது மற்றும் வெலிக்கடை சிறையின் அதிகாரிகளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமை போன்ற சமீபத்திய செயற்பாடுகள், கடந்தகால மூடிமறைப்புகளில் இருந்து வேறுபட்ட நிலையை காட்டுகின்றன. எனினும் அது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமாயின், தண்டனைகள் என்பது தாரதரம் பற்றி கருத்திற்கொள்ளாமல் நிறைவேற்றப்பட வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறவேண்டும். இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைத்த விடயங்ளை அமுல்படுத்தவேண்டும்.
அவையாவன
- காவல்துறையின் நடத்தையை மறுபரிசீலனை செய்ய சுயாதீன கண்காணிப்பு அமைப்புகள்.
- வழக்குகளை விரைவுபடுத்த CAT சட்டத்தில் திருத்தங்கள்.
- விசாரணையின் போது உடலில் பொருத்தப்படும் கெமராக்களை பயன்படுத்தல்
தவறு செய்பவர்களை பாதுகாக்கும் கலாச்சாரம் இல்லாமல் ஆக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே மக்களுக்கு சட்டத்தின் மீதும் ஆட்சியின் மீதும் நம்பிக்கை ஏற்படும். முறையான மாற்றங்களை ஏற்படுத்தாத வரை, நிமேஷ் சத்சரவின் மரணம் ஒன்றும் இறுதிச் சம்பவமாக அமையப் போவதில்லை.
செய்தியாக்கம் – கே.கே.