டான் பிரியசாத் : எதற்காக குறிவைக்கப்பட்டார்?

0
20
Article Top Ad

 

நவ சிங்களே தேசிய இயக்கத்தின் அழைப்பாளராக செயற்பட்ட டான் பிரியசாத், 22.04.2025 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவ தினத்தன்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத்தொகுதியின் 6ஆவது மாடியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டினை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

39 வயதான அவர், எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கொலன்னாவ நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்காக குரல்கொடுப்பவராக தன்னை வெளிப்படுத்தி வந்த டான் பிரியசாத், சரச்சைக்குரிய அரசியல் செயற்பாட்டாளர் என்ற பிம்பத்தை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருந்தார். முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து அடிக்கடி போராட்டங்கள், சமூக ஊடக பிரச்சாரங்களை முன்னெடுத்த காரணத்தால் இவரது கடும்போக்கு சிந்தனை தொடர்பாக கடந்த காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியான பின்னர், மக்கள் சமூக ஊடகங்களில் அதனை கொண்டாடி தீர்த்தனர் என்றே கூறவேண்டும். துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துவிட்டதாக முதலில் நேற்றிரவு 9 மணியளவில் செய்திகள் வெளியாகின. பொலிஸாரையும் வைத்தியசாலை வட்டாரங்களையும் மேற்கோள் காட்டியே இந்த செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர், 11 மணியளவில் அவர் இறக்கவில்லை என்றும், அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர், அவர் மரணித்துவிட்டதாக இன்று காலையே பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த குழப்பமான நிலையில், வைத்தியசாலை தொடர்பான செய்திகளை வழங்குவது பொலிஸாரா அல்லது வைத்தியர்களா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அத்தோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தை சிலர் டக் செய்தும் இதுபற்றி விளக்கம் கோரியிருந்தனர்.

எவ்வாறாயினும், டான் பிரியசாத் காலமான செய்தியை மக்கள் “சிறந்த விடயம்” என்ற பாணியிலேயே பார்க்கின்றனர். வழமையாக இறப்புச் செய்திகளுக்கு சோகமான இமோஜிகளை பயன்படுத்தும் மக்கள், இவரது இறப்பிற்கு சந்தோசத்தை வெளிப்படுத்துவதானது, அவரது கடந்த கால செயற்பாடுகள் மக்கள் மனதில் ஏற்படுத்திய காயமே காரணம் என்பதாக சில பதிவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்தாக அவர் சமூக செயற்பாட்டாளர் என்றே பிரதான ஊடகங்கள் கூட நேற்றிரவு முதல் செய்திகளையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பி வருகின்றன. அவர் அப்படி என்ன சமூக சேவை செய்தார் என்ற கேள்விகளையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

டான் மீதான குற்றச்சாட்டுக்கள்

நன்கொடைகள் மற்றும் நிதி சேகரிப்புகள் மூலம் தேசியவாதத்திலிருந்து பணம் சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை அவர் துபாய் பயணம் உள்ளிட்ட தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

  • 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், குருநாகல் மற்றும் திகன கலவரங்கள் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுடன் அவர் தொடர்புடையவர். 2022 அரகலய போராட்டத்தின் போது ராஜபக்ஷவின் விசுவாசிகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அரகலயவின் போது இரும்புக் கம்பியுடன் அவர் சிலரை விரட்டிச் சென்ற படம் வைரலானது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • செலுத்தப்படாத கடன்கள் மற்றும் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக அவர் கடன் கொடுத்தவர்களிடமிருந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • 2017ஆம் ஆண்டில், ரோஹிங்கியா அகதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அவர் வன்முறை தேசியவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் காட்டுகிறது.

கொலைக்கான காரணம் என்ன?

கொலைக்கான காரணம் தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகிவில்லை. எனினும், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கஞ்சிபானை இம்ரான் என்ற பாதாள உலகக் குழு தலைவரின் தலைமையிலான கும்பல் இதனை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மறுபுறம், டான் பிரியசாத்தின் சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால், மக்களைப் பொறுத்தவரை, அவர் முன்னாள் ஆட்சியாளர்களின் கையாள் என்றும், அவர் கைதுசெய்யப்பட்டால் பலரது இரகசியங்கள் வெளியாகலாம் என்ற பயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

டான் பிரியசாத் தொடர்பில் கொலையாளிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டு, இன்று மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுடனான விசாரணையின் அடிப்படையில், மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரியசாத், இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் “தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு” என்ற பெயரில் தமிழ் வர்த்தகர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.  இந்த வகையான அடிமட்ட மற்றும் வன்முறைச் செயற்பாடுகள் ஊடாகவே அவர் அறியப்பட்டுள்ளார். இனப் பதட்டங்களைத் தூண்டுவது மற்றும் தேசியவாத உணர்வுகளிலிருந்து பணம் சம்பாதிப்பது பற்றி இவர் நன்கு அறியப்பட்டவர். இந்த நடத்தையே இறுதியில் அவரது வீழ்ச்சிக்கும் மரணத்திற்கும் வழிவகுத்தது என்பது பொதுவான கருத்தாக அமைகின்றது.

சகோதரனின் கொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கும் இதற்கும் தொடர்பு?

அண்மித்த தகவலின் பிரகாரம், பந்துல பியல் மற்றும் மாதவ சுதர்ஷன என்ற இரண்டு நபர்கள் தொடர்பாக நீதிமன்றில் குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவர்களுக்கு பயணத்தடை விதிக்குமாறு கோரினர். அதன் பிரகாரம், தந்தையும் மகனுமான குறித்த இரண்டு நபர்களுக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டான் பிரியசாத்தின் சகோதரனான திலின பிரியசாத், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புபட்ட தந்தையும் மகனுமான பந்துல பியல் மற்றும் மாதவ சுதர்ஷன ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்கு உள்ளது. அவர்கள் மீதே தற்போதும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதோடு, இக்கொலை தொடர்பான விசாரணைக்கு ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடும்போக்கு தேசியவாத சிந்தனை, பதட்டங்களை உருவாக்குபவர், வன்முறையாளர், கடனாளி என்ற எதிர்மறையான விடயங்களால் மாத்திரமே அறியப்பட்ட டான் பிரியசாத்தின வாழ்க்கை, அவர் தெரிவுசெய்த பாதை வழியாகவே முடிவுக்கு வந்துள்ளது. கட்டுப்பாடற்ற தேசியவாதம் பிரிவினைக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையாகவே அவரது கதை அமைகின்றது.

செய்தியாக்கம் : கே கே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here