வரி சலுகையை பெறுவதற்கு அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன்
டி.சி.யில் நேற்று முன்தினம்செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பின்புலத்திலேயே பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர வரிகள் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ், இலங்கைப் பொருட்களுக்கு 44 வீதம் வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழிலான ஆடைத் துறையைப் பெரிதும் பாதித்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 23 சதவீதமான ஆடைகள் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் வரி விதிப்புகள் அதிகரிக்கப்பட்டால் இது கடுமையான நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வோஷிங்டனில் இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படுவதாக அரசதரப்பு செய்திகள் மூலம் அறிய முடிகிறது.