தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, இன்று (25) பாராளுமன்றத்தில் மீண்டும் கூடியது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு விசாரணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
மேலும், எதிர்கால விசாரணைச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் மற்றும் விசாரணைக்குழுவில் உள்வாங்க வேண்டியவர்கள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, இக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த பத்தாம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட அவரை, முழுமையாக பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தெரிவித்து, பாராளுமன்றில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் விசாரணை குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டதோடு, உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனாவின் தலைமையில், நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு கடந்த 22ஆம் திகதி முதற்தடவையாக பாராளுமன்றத்தில் கூடியது.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் காரை ஓட்டிச் சென்றதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய, தேசபந்து தென்னகோனை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய, இன்றைய தினம் காலை அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.