காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல், உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே உள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை போர் அறிவிப்பிற்கு சமம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பதிலுக்கு பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் இந்த பயிற்சியும், ஒத்திகையும் நடந்துள்ளது. எனினும், இது வழக்கமான பயிற்சி என இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் பின்னணியில், இந்திய இராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு ஆதரவை தெரிவிப்பதாக, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார்.