பொலிஸ்மா அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் பதவியை நீக்குவது குறித்து ஆராயும் விசாரணை குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, 4 பேர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபரால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளடக்கி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் கைதுசெய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த சம்பவம் மற்றும் தனது பதவிக்காலத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து இவருக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் தலைமையில், நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு இரண்டு தடவைகள் கூடியதோடு, கடந்த 25ஆம் திகதி கூடியபோது பொலிஸ் விசாரணை குழுவொன்றிற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் பிரகாரம், இன்று இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.