மக்களுடன் இணைந்து பயணித்த பாப்பரசரை நினைவுகூர்தல்

0
9
Article Top Ad

தனது உடமைகளை தானே தூக்கிச் சென்றார். பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தான் தங்கும் ஹோட்டலின் செலவை அவரே செலுத்தினார். பாப்பரசர்களுக்கான குடியிருப்பில், மிக எளிய ஒரு தங்குமிடத்தையே அவர் தெரிவுசெய்தார். மரணித்த பின்னரும் தன்னை எவ்வித அலங்காரங்களும் அற்ற வெற்றுப் பேழையில் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர்தான் பாப்பரசர் பிரான்சிஸ். அவருடைய அந்த எளிமையும் பணியும் வெறுமனே வெளிப்படுத்தலுக்காக அல்ல, மாறாக சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓர் தலைமைத்துவத்தை மாற்றியமைத்த பெருமைக்குரியவர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலை, இலங்கையில் சுட்டெரிக்கும் வெயிலில் நாங்கள் நின்றுகொண்டிருந்த ஞாபகம் உள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் அந்த வெப்பக்காற்றுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் பொறுமையாக காத்திருந்தனர். கத்தோலிக்க தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கிய மனிதரைக் காண தொலைதூர கிராமங்களில் இருந்தும் மக்கள் இரவிரவாக பயணித்து அங்கு வந்து காத்திருந்தனர்.

பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, ​​நான் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது, கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் நின்று, பாப்பரசரின் ஊர்தி நகர்ந்துசெல்வதை பார்த்தமை நினைவில் உள்ளது.  ஆனால், பாப்பரசர் பிரான்சிஸ் விஜயம் செய்யும்போது, நான் ஊடகத்தில் கடமையாற்றிக்கொண்ருந்தேன். அப்போது நான் யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் சகோதர பத்திரிகையான சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றினேன். என்னுடன், எமது ஏனைய ஊடகவியலாளர்களான அருண் பிரசாத் மற்றும் கே. பாரதிராஜா ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தோம். கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் என்பதால், இந்த விஜயத்தின் முக்கியத்துவம் பற்றி நான் அறிந்திருந்தேன்.

2015 பாப்பரசரின் வருகையின் போது கொழும்பு காலி முகத்திடலில் சக ஊடகவியலாளர்களுடன் காத்திருந்த சந்தர்ப்பம்

பாப்பரசரின் நகரும் ஊர்தி தோன்றியபோது, எமக்குப் பின்னால் தோன்றிய கடல் அலையின் சத்தத்தை விஞ்சும் அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அந்தளவு பாரிய ஆரவாரத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. மாறாக, மக்களுடனான பிணைப்பின் காரணமாக பிரான்சிஸ் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு முக்கியமான உலகத் தலைவரைப் போலல்லாமல், அந்த நேரத்தில் உண்மையில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு நபராக கையசைத்தார்.

“இவர் வெறுமனே இன்னொரு உலகத் தலைவர் அல்லர்” என என் அருகிலிருந்த ஒரு ஊடகவியலாளர் கிசுகிசுத்தார். எங்களைச் சுற்றியிருந்த எல்லா மதத்தினரும் வெளிப்படையாகவே கண்ணீர் சிந்தினர். உண்மையாகவே பணிவுகொண்ட ஒரு தலைமையை நாம் கண்டோம். இது மிகவும் அரிதானதாகும்.

படம் – ரவீந்திர வீரசிங்க

ஜோசப் வாஸின் புனிதர் பட்டத்தின் போது நெருக்கமாக நின்று, கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கரல்லாதவர்களும் ஒரு ஆசீர்வாதத்தையோ அல்லது தொடர்பையோ எதிர்பார்த்து முன்னேறிச் செல்வதைக் கண்டேன். அப்போது எனது தொழில்சார் கடமையில் இருந்து நான் விலகியதாக உணர்ந்தேன். “நாம் எமது  உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஆனால் பாப்பரசரின் வருகை எம்மை சிறிது நேரத்திற்கேனும் எமது பணியை மறக்கச்செய்தது” என சக ஊழியர் ஒருவர் பின்னர் குறிப்பிட்டார்.

பாப்பரசரின் மறைவுடன் அந்த நினைவலைகள் தெட்டத்தெளிவாக மீண்டும் மேலெழுந்துள்ளது. நல்ல விடயங்களை பலர் போதிக்க முடியும். ஆனால், ஒரு சிலர் மாத்திரமே அதனுள் உண்மையாக வாழ்கின்றனர். இதன் காரணமாகவே, பாப்பரசரின் மரணம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலிக்கின்றது.

தற்காலத்தில் இரண்டாவது வயது முதிர்ந்த பாப்பரசராக இருந்த பிரான்சிஸ், 88 வயதில் உடல் நலம் குன்றிய நிலையில் மரணித்துள்ளமை தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நாம் அறிவோம். எனினும் அவர் நீண்ட காலம் வாழ வேண்டுமென நாம் விரும்பினோம். காரணம், போரை நாடுபவர்கள், மனித உரிமையை மீறுவோர் மற்றும் சர்வாதிகாரிகளுக்கு சவால் விட ஒரு சில தலைவர்கள் மாத்திரமே உள்ளனர். அந்த எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

பிரிந்திருந்திருப்பவர்களுக்கு இடையே பாலமாக செயற்பட்டார்

இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அவர் மேற்கொண்ட விஜயம், அவர் பாப்பரசராக இருந்த காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த தருணங்களில் ஒன்றை உருவாக்கியது. அமைதியை வெளிப்படுத்தும் வகையில், மடு மாதா ஆலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் ஒரு வெள்ளைப் புறாவை பறக்கவிட்டார். அந்த சரணாலயமானது, கொடூரமான உள்நாட்டுப் போரின் போது தமிழ் மற்றும் சிங்கள அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. அந்த புறா பறந்த சந்தர்ப்பத்தில், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஆற்றுப்படுத்தல்களுக்கான அவர்களது பகிரப்பட்ட விருப்பத்தை பெரும்பாலும் உணரக்கூடியதாக இருந்தது.

“உண்மைக்கான தேடல் அவசியம், இது பழைய காயங்களை மீண்டும் மீட்டுவதற்காக அல்ல, மாறாக நீதி, ஆற்றப்படுத்தல் மற்றும் சமாதானத்தை ஆதரிப்பதற்கு இவை அவசியமாகும்” என்று அன்றைய தினம் பாப்பரசர் தெரிவித்தார்.

நல்லிணக்கத்திற்கு அடிப்படையான விடயத்தை பாப்பரசர் உணர்ந்துகொண்டார். அதாவது, அதனை மேல்மட்டத்திலிருந்து கட்டளையிட்டு ஏற்படுத்த முடியாது, கீழ் மட்டத்திலிருந்து அதனை கட்டமைக்க வேண்டும் என்பதே அதுவாகும். இந்த நம்பிக்கை அவரது தலைமைக்கு வழிகாட்டியது. அவர் “சுற்றுப்புறங்கள்” என்று அழைக்கும் குரல்களில் அதிக கவனம் செலுத்தும் ஒரு பாப்பரசராக உருவாக இது உதவியது.

படம் – டுவிட்டர்

விளிம்புகளை அடையும் மரபு

பாப்பரசர் இலங்கையில் இருந்த அந்த ஒரு வாரத்தின் தாக்கம், பத்து வருடங்களில் பின்னரும் முன்னெப்போதையும் விட தெளிவாக தெரிகின்றது. அவரது பாப்பரசர் பதவிநிலை, அலங்கரிக்கப்பட்ட அறைகளில் இருந்து பிரமாண்டமான உரைகளால் மத்திரம் வரையறுத்துக்கொள்ளாமல், உண்மையான மனிதத்தன்மையின் தருணங்களைக் கொண்டு காணப்பட்டது.

பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட கைதிகளின் கால்களைக் அவர் கழுவினார். ஒரு நோயுள்ள மனிதனை ஆறத் தழுவிக் கொண்டார். சக்கர நாற்காலியில் காணப்பட்ட ஒரு குழந்தையை ஆசீர்வதிப்பதற்காக அவர் தனது வாகன அணிவகுப்பை நிறுத்தினார். வீடற்ற மக்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக, அரசியல்வாதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவை அவர் தவிர்த்தார்.

“மற்றவர்களை நாம் மேலிருந்து கீழ்நோக்கி பார்க்கின்றோம் என்றால், அது, அவர்கள் மீண்டுவருவதற்கு உதவுவதற்கானதாக மாத்திரமே இருக்க வேண்டும்” ஒருதடவை இவ்வாறு குறிப்பிட்ட அவர், இந்த தத்துவத்தை அவர் ஒவ்வொரு தொடர்புகளிலும் வெளிப்படுத்தினார். தலைமைத்துவம் என்பது மிகக்குறைந்த அதிகாரம் உள்ளவர்களுக்குச் சேவை செய்வதே தவிர, அதிகம் உள்ளவர்களுக்குச் சேவை செய்வதில்லை என்பதை அவரது செயற்பாடுகள் எப்போதும் வெளிப்படுத்தின.

2022ஆம் ஆண்டில், கனடாவில் குடியிருப்புப் பாடசாலை கட்டமைப்பில் கத்தோலிக்க திருச்சபை தலையிட்டமைக்கு நேரில் மன்னிப்பு கேட்பதற்காக அவர் கனடாவுக்குப் பயணம் செய்து துணிச்சலான நடவடிக்கையை எடுத்தார். தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் முன் அமர்ந்து அவர் இவ்வாறு கூறினார்: “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். கலாச்சாரங்களை அழிக்கும் செயல்களில் எத்தனை திருச்சபை உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள் என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.

நிறுவனங்களின் பொறுப்புக்கூறலுக்கான ஒரு தனித்துவமான தருணமாக இது அமைந்ததோடு, பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற தீங்குகளை அடையாளம் கண்டு அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான வழிகளை உருவாக்கியது.

படம் – டுவிட்டர்

மாபெரும் சீர்திருத்தவாதி

அடையாளப்படுத்தும் சைகைகளுக்கு அப்பால், பிரான்சிஸ் உறுதியான மாற்றங்களைச் செய்தார். மதகுருக்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவர் திருச்சபையின் விதிகளை சீர்திருத்தினார். கத்தோலிக்க திருச்சபையின் கவனத்தை கலாச்சாரப் போர்களில் இருந்து திசைதிருப்பி சமூக நீதிக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும் சமத்துவமின்மைக்கு எதிராகவும் போராடினார். 2015இல் அவர் எழுதிய Laudato Si’ கடிதத்தில், காலநிலை மாற்றத்தை ஒரு தார்மீக பிரச்சினை என்று விவரித்து, சுற்றுச்சூழல் செயற்பாடுகளில் அவரை ஒரு எதிர்பாராத தலைவராக மாற்றிக்கொண்டார்.

அவர் தேவாலயத்தில் பெண்களுக்கு புதிய பாத்திரங்களை உருவாக்கினார். 2023ஆம் ஆண்டில், ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்க பாதிரியார்களை அவர் அனுமதித்தார். அவரது ஒவ்வொரு செயற்பாடும் பாரம்பரியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டது. எனினும், தேவாலயம் என்பது “அமைதியின்மைக்கு பின்னர் ஆறுதலையும் உதவியையும் பெறும் ஒரு இடமாக அமைய வேண்டுமே தவிர, விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் செயற்படுத்தும் இடமாக இருப்பதல்ல” என்பது பிரான்ஸிசின் நோக்கமாக இருந்தது.

ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியின் போது, ​​உதவி செய்ய மறுத்தவர்களுக்கு அவர் சவால் விடுத்தார்: “உன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொண்டு, அகதி அல்லது பசி அல்லது தாகம் உள்ளவரைத் விரட்டினால் அது பாசாங்குத்தனம். நான் கிறிஸ்தவன் என்று கூறிக்கொண்டு, இவற்றைச் செய்தால், நானும் ஒரு பாசாங்குக்காரன்.” என்றார். இந்த வார்த்தைகள் “முதலில் ஆற்றுப்படுத்துங்கள், பின்னர் தீர்மானியுங்கள்” என்ற அவரது தத்துவத்தை பிரதிபலித்தது, இது கத்தோலிக்க சமூகங்களுக்கு அப்பாற்பட்ட மக்களிடையேயும் எதிரொலித்தது.

படம் – டுவிட்டர்

அசையாத குரல்

அவரது இறுதி நாட்களில், அவரது உடல்நிலை மோசமடைந்த சந்தர்ப்பத்தில்கூட, யுத்த பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அர்ப்பணிப்புடன் இருந்தார். காசாவின் கத்தோலிக்க திருச்சபையைச் சுற்றி குண்டுகள் விழுந்துகொண்டிருந்தபோது அவர் இரவிரவாக அழைப்புகளை ஏற்படுத்தி உரையாடினார். பொதுமக்கள் மத்தியில் ஆற்றிய அவரது இறுதி உரையில், போர் நிறுத்தத்தைக் கோரினார், அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு தனது செய்தியை ஒருபோதும் அவர் மாற்றவில்லை.

“இதற்கு பெயர் யுத்தமல்ல, இது கொடூரம்” என அவர் யுத்தம் பற்றி குறிப்பிட்டார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், “நாங்கள் மரணத்திற்காக உருவாக்கப்பட்டவர்கள் அல்லர், வாழ்வுக்காக உருவாக்கப்பட்டோம்” என்று உலகிற்கு அவர் கடைசியாக அந்த செய்தியை வெளியிட்டார். இந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகள்தான் அவரது கடைசி பொது அறிவிப்பாக இருக்கும். அவர் பாப்பரசராக பதவி வகித்த காலம் முழுவதும் அவர் ஊக்குவித்த நம்பிக்கையின் பொருத்தமான நினைவூட்டலாக இது அமைகின்றது.

உலகளவில் செல்வாக்கு காணப்பட்ட போதும், பாப்பரசர் பிரான்சிஸ் ஒருபோதும் ஒரு போதகராக தனது கரிசனையை இழக்கவில்லை. பிரார்த்தனையின் போது பக்தர்கள் உறங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று ஒருதடவை கேட்டபோது, ​​​​அவர் புன்னகைத்து, தங்கள் குழந்தைகள் தமது கைகளில் தூங்கும்போது தந்தைமார் அதை விரும்புகின்றனர் என புன்னகையோடு தெரிவித்தார். இந்த பதில், தெய்வீக அன்பைப் பற்றிய அவருடைய புரிதலைப் பிரதிபலித்ததோடு, நம்முடைய மிகவும் பாதிக்கப்படக்கூடிய தருணங்களிலும் கடவுள் நம்மை வரவேற்கிறார் என்பதைக் காட்டுகிறது.

படம் – டுவிட்டர்

அவர் காட்டிய வழியில் முன்னோக்கிச் செல்தல்

பாப்பரசரின் இறுதிச் சடங்கில் ஒன்றுகூடிய உலகத் தலைவர்கள் பலர் அவரது போதனைகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தனர். சொற்பொழிவு வார்த்தைகளுக்கும், அவருடைய கொள்கைகளின்படி உண்மையாக வாழ்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பாப்பசரசர் பிரான்சிஸை உண்மையாகக் கௌரவிக்க வேண்டுமாயின், தாராள மனப்பான்மை, பச்சாதாபம் மற்றும் கருணை ஆகியவற்றின் மூலம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அன்பைக் காட்ட வேண்டும்.

பராக் ஒபாமா கூறியது போல், “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறந்த மனிதர்களாக இருக்க எம்மைத் தூண்டிய அரிய தலைவர்.” அவரது பணிவான செயல்கள் “மனநிறைவாக நினைத்துக்கொண்டிருந்த எம்மை தட்டியெழுப்பி, நாம் செய்யவேண்டிய தார்மீக கடமைகளை நினைவூட்டியது.”

எமக்கு இரண்டு வழிகள் உள்ளன: அவர் பகிர்ந்த வலுவான செய்திகளைப் புறக்கணித்து, பிரான்சிஸை ஒரு புனிதமான நபராகக் கருதுவது ஒரு வழியாகும்.  குரலற்றவர்கள் பக்கம் சார்ந்து, சிதைந்த வரலாறுகளை ஆற்றுப்படுத்தி, பிரிவு அல்லது பிரிவினை இருந்த இடத்தில் புரிதல் மற்றும் இணைப்பை உருவாக்குதல் மற்றொரு வழியாகும்.

பாப்பரசர் பிரான்சிஸின் உண்மையான மரபு அவரது இறுதி ஊர்வலத்தின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படாது. ஆனால் அவரது முன்மாதிரியின் காரணமாக அன்றாட மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எம்முடன் பயணித்த இந்த பணிவானவரைப் பற்றி துக்கம் அனுசரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில், பிளவுகளைக் குறைப்பதன் மூலமும், எமது பூமியை கவனித்துக்கொள்வதன் மூலமும், சமுதாயத்தில் உள்ள தெய்வீகத்தை அங்கீகரிப்பதன் மூலமும் அவரது பாதையைத் தொடரும் தைரியத்தை பெறுவோம்.

பிரார்த்தனை என்பது கடவுளிடம் மன்றாடுவது மட்டுமன்றி, பசித்தவர்களுக்கு உணவளிப்பதும் கூட என்று கூறியவருக்கு, அவ்வாறு செயற்படுவதே சிறந்த அஞ்சலியாகும். பாப்பரசர் பிரான்சிஸை வார்த்தைகளால் நினைவுகூருவதற்கு மட்டுமல்லாமல், மிகவும் இரக்கமுள்ள, நீதியான மற்றும் கருணையுள்ள உலகத்தை உருவாக்கும் செயல்களின் மூலம் அவரைக் கௌரவிப்பதற்காக நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

மக்களுக்கான பாப்பரசர் இந்த உலகிற்கான தனது பயணத்தை நிறைவுசெய்துள்ளார். அவர் உருவாக்கிய பாதையை பின்பற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது.

கட்டுரையாக்கம் – அருண் ஆரோக்கியநாதர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here