பாப்பரசர் பிரான்சிஸ் மறைந்ததைத் தொடர்ந்து, 267ஆவது பாப்பரசரை தெரிவுசெய்யும் நிகழ்வு (Conclave) 2025 மே மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 135க்கும் மேற்பட்ட கர்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் கூடி அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுப்பார்கள். உலகம் முழுவதிலுமிருந்து 71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாப்பரசர் தேர்தலுக்கு வரும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
நடைமுறையும் சவால்களும்
இந்த நிகழ்வானது பல நூற்றாண்டுகள் பழமையான இரகசியம் மற்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றது. சிஸ்டைன் தேவாலயத்தில் கூடும் கர்தினால்கள், ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வரை ஒரு நாளைக்கு நான்கு முறை வாக்களிப்பார்கள். 2005 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இரண்டு நாட்கள் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில், அதைவிட இம்முறை நீண்ட நேரம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், ஐரோப்பிய மேலாதிக்கத்தை விட உலகளாவிய பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை அளித்த மறைந்த பாப்பரசர் பிரான்சிஸால் நியமிக்கப்பட்ட பல கர்தினால்கள், ஒருவருக்கொருவர் நன்கு பரீட்சயமானவர்கள் அல்லர்.
சிவப்பு உடையில் அலங்கரிக்கப்பட்டு வாக்களிக்க வரும் கர்தினால்களின் வாக்குச் சீட்டுகள், பாப்பரசரை தேர்ந்தெடுத்த பின்னர் எரியூட்டப்படும். 1800ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. வாக்கெடுப்பின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதற்காகவும் அரசியல் தலையீடுகளிலிருந்து திருச்சபையை பாதுகாப்பதற்கும் இந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகின்றது.
வாக்குச்சிட்டுக்களை எரியூட்டும்போது வெளியேறும் புகை மூலமாகவே, பாப்பரசர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெளி உலகத்திற்கு அறிவிக்கப்படும்.
தெரிவுப்பட்டியலில் முன்னணியில் உள்ளவர்கள்
பாப்பரசரின் தெரிவு என்பது கணிக்க முடியாத ஒரு விடயம் என்றாலும், பலரது பெயர்கள் சாத்தியமான முன்னணிப் பட்டியலில் உள்ளன:
பீட்ரோ பரோலின் (70 வயது, இத்தாலி): வத்திக்கானின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், பிரான்சிஸின் முக்கிய ஆலோசகருமான பரோலின், சிறந்த நிறுவன அறிவைக் கொண்ட ஒரு நிர்வாகியாவார்.
லுயிஸ் அன்டோனியோ டகல் (68 வயது, பிலிப்பைன்ஸ): ஏழைகளின் நலனுக்காக செயற்படும் டகல், வத்திக்கானின் சுவிசேஷ அலுவலகத்தில் கடமையாற்றுவதோடு, ஆசியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே ஒரு பாலமாக செயற்படுகின்றார்.
ஃப்ரிடோலின் அம்போங்கோ பெசுங்கு (64 வயது, கொங்கோ): கின்ஷாசாவின் பேராயரான பெசுங்கு, சமூக நீதி மற்றும் காலநிலை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, தேவாலயத்தில் ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் செல்வாக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மரியோ கிரெச் (68 வயது, மோல்டா) மற்றும் ஸ்டீபன் சொவ் (65 வயது, ஹொங்கொங்): ஏனையோருக்கும் அதிகாரத்தை வழங்கும் பரவலாக்கப்பட்ட தேவாலய கட்டமைப்பு என்ற பாப்பரசர் பிரான்ஸிசின் வழியை தொடர விரும்பும் தலைவர்கள்.
தற்போதைய நிலைவரப்படி இவர்களது பெயர்கள் முன்னணியில் இருந்தாலும், இவற்றில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமும் உண்டு.
பிரதிநிதித்துவத்தில் உலகளாவிய மாற்றம்
இம்முறை பாப்பரசர் தெரிவிற்கு வாக்களிக்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை அரைவாசியை விட குறைந்துவிட்டது. பிரான்சிஸின் நியமனங்கள் காரணமாக இவ்வாறு குறைவடைந்துள்ளமை இது முதலாவது சந்தர்ப்பமாகும். துணை-சஹாரா ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இப்போது பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. 50 வீதத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் இப்போது அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வசிப்பதால், இந்த பன்முகத்தன்மை திருச்சபையின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது.
எதிர்பார்ப்பு
காலநிலை ஆதரவு மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கான ஆதரவு என்பது மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும். இவற்றைத் தொடர்வதற்கு கர்தினால்கள் முன்னுரிமை வழங்குகின்றனரா அல்லது கோட்பாட்டு பாரம்பரியத்திற்குச் செல்லப்போகின்றனரா என்பதை அடுத்த பாப்பரசர் தெரிவு தீர்மானிக்கும்.
செய்தியாக்கம் -கே.கே.