சர்ச்சைக்குரிய பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நடத்திச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பட்டலந்த விவகாரம் சுமார் 25 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், அண்மையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது இதுகுறித்து ஊடகவியலாளர் வினவினார். இதனையடுத்து பூதாகரமாக வெடித்த இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தும் என தற்போதைய ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
அதன் பிரகாரம், இந்த அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காகவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.