மாற்றத்தை நோக்கி நகர்கின்றதா இலங்கை பொருளாதாரம்?

0
3
Article Top Ad

இலங்கையின் பொருளாதாரம் ஏப்ரல் 2025இல் வலுவான மீட்சியைக் காட்டுகின்றது. கடுமையான சீர்திருத்தங்கள், புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய நம்பிக்கை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி மீதான அதிகரிப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. சில முக்கியமான மாற்றங்களை பொறுத்தவரை, பாரிய நெருக்கடிக்குப் பின்னர் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. ஆனால், சவால்கள் இன்னும் உள்ளன.

2024ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  29.05.2025 அன்று கையளித்தமை, பொறுப்புக்கூறலில் ஒரு முக்கிய படிநிலையைக் காட்டுகிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், நிதி அமைப்பு மிகவும் நிலையானதாகவும், சர்வதேச கணக்கியல் விதிகள் பின்பற்றப்படுவதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. இது 2022இல் காணப்பட்ட தெளிவற்ற மற்றும் சிக்கலான சூழ்நிலையிலிருந்து மிகவும் வித்தியாசமானது. சுயாதீன தணிக்கைகள் மற்றும் சர்வதேச அறிக்கையிடல் தரங்களைப் பின்பற்றுவது (IFRS) என்பன, பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவியது. இது நாட்டின் மீட்சியின் முக்கிய அங்கமாக இலங்கை மத்திய வங்கியை மாற்றியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 4ஆவது தவணை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 344 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியை பெற்றுக்கொள்வதற்கான நான்காவது மீளாய்விற்கான அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை இலங்கை எட்டியுள்ளது. இலங்கை தனது சீர்திருத்தங்களினால் குறிப்பிடத்தக் முன்னேற்றம் அடைந்து வருவதைக் காட்டுகிறது.முக்கியமான விடயங்களாக, 2024இல் 5% பொருளாதார வளர்ச்சி, வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5% ஆக உயர்வு மற்றும் கடன் மறுசீரமைப்பை ஏறத்தாழ பூர்த்திசெய்தமை ஆகியவை அடங்கும்.

எனினும், இலங்கையில் செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை (cost-recovery electricity pricing) உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இது நிதி ஆபத்துகளைக் குறைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடிப்பதற்கும் அவசியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பணி தலைவர் எவன் பபகியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பணி தலைவர் எவன் பபகியோர்ஜியோ (Evan Papageorgiou)

மின் உற்பத்திக்கான உண்மையான செலவை பொருத்தவரை மின்சாரம் உற்பத்தி மற்றும் வழங்குவதற்கான உண்மையான செலவுகளை ஈடுசெய்யும் அளவில் அரசாங்கம் மின்சார விலையை நிர்ணயிக்க வேண்டும். இது நிதி அபாயங்களைக் குறைப்பதற்கும் நாட்டின் மின்சார உட்கட்டமைப்பில் தேவையான முதலீடுகளுக்கு இடமளிப்பதற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

பணம் அனுப்பும் செயற்பாட்டில் அதிகரிப்பு

மார்ச் 2025இல், வெளிநாடுகளில் உள்ள அதிகமான இலங்கையர்கள் முறையான வழிமுறைகளைப் பயன்படுத்தியதால், பணம் அனுப்புதல் 693.3 மில்லியன் டொலர்களை எட்டியது, இது முந்தைய ஆண்டை விட 21% அதிகமாகும். முதல் காலாண்டில், மொத்த வரவுகள் 1.81 பில்லியன் டொலர்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 1.54 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்போது, 6.5 பில்லியன் டொலர்களாக மாறியுள்ளதால், அந்நிய கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த மாற்றம் வங்கி அமைப்பில் நம்பிக்கை அதிகரிப்பதையும், சட்டவிரோத வலையமைப்புகளை தடுக்கும் முயற்சிகளையும் காட்டுகிறது.

இது தொடர்பாக மத்திய வங்கி பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதோடு, நாட்டின் பொருளாதார நிலை கருதி முறையான வழிகளில் பணத்தை அனுப்புமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30.04.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும், இந்த முன்னேற்றங்கள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்துத் தெரிவித்தார். குறிப்பாக மார்ச் மாத இறுதிக்கும் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த வருடத்திற்குள் இது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீர்க்கப்படாத விடயம்

குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், இலங்கையில் 24.5% குடும்பங்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழேயே உள்ளன, இளைஞர்களின் வேலையின்மை தொடர்கிறது மற்றும் வர்த்தக ரீதியான நிச்சயமற்ற தன்மை மற்றும் எண்ணெய் விலைகள் போன்ற உலகளாவிய அபாயங்கள் முன்னேற்றத்தைக் குறைக்கலாம். அரசாங்கம் ஸ்திரப்படுத்தலில் இருந்து அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை நோக்கி கவனம் செலுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூக பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்தல் மற்றும் ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்த வேண்டும்.

நேர்மறை மாற்றங்களும் செய்யப்பட வேண்டியவையும்

மத்திய வங்கியின் வெளிப்படையான அறிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மற்றும் வலுவான பணம் அனுப்புதல் ஆகியவை இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. சவால்கள் உள்ளபோதும், குறிப்பாக மீட்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்வதில், மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் நிலையான முன்னெடுப்புக்களை செய்வது கட்டாயமாகும்.

சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் விவேகமான நிதி முகாமைத்துவம் என்பன, இந்த வேகத்தைத் தக்கவைக்க முக்கியமாக இருக்கும்.

இலங்கையின் மீட்சி உண்மையானது ஆனால் பலவீனமானது. ஆகவே, மீட்டெடுக்கும் தன்மையை தொடர, அரசாங்கம் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, அது எவ்வகையிலும் பொதுமக்களைக் பாதிக்காமல் சமநிலை நோக்குடன் செயற்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு சவாலாக அமையும் இந்த முயற்சி, இலகுவானதல்ல. ஆகவே, பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கி, உலகளாவிய உதாரணங்களையும் பரிசீலனை செய்து மிகவும் நிதானமாக, நடைமுறை சாத்தியமான முன்முயற்சிகளை எடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது.

செய்தியாக்கம் – கே.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here