GSP+ மீளாய்வு குறித்து சாதகமான பதில் – அரசாங்கம்

0
130
Article Top Ad
GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி (Charles Whiteley) தெரிவித்துள்ளா் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது GSP+ வரி தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது என்றும், தொடர்ந்தும் வர்த்தக வெற்றிகளை அடைய இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய தலைவர் சார்ல்ஸ் வைட்லி குறிப்பிட்டுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையை வழங்க, கருத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் சார்ல்ஸ் வைட்லி குறிப்பிட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகை அல்லது பொதுவான விருப்பத்தேர்வு முறை தொடர்பான 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
முன்மொழிவுகள் அடங்கிய மனுவை கையளித்தது மனோ தரப்பு
இதேவேளை, இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய GSP+ வரி சலுகை கண்காணிப்பு குழுவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவிற்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த வரிச்சலுகையை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்குமாறு கோரி, முன்மொழிவுகள் அடங்கிய மனு ஒன்றையும் மனோ தரப்பினர் கையளித்துள்ளனர். அவையாவன –
  • பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல்
  • புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வின் மூலம் தீர்வு காணப்படல்.
  • வலிந்து காணாமல் போனோர் பிரச்சினைக்கு பொறுப்புக் கூறல் அடிப்படையில்  தீர்வு காண, உடனடியாக உண்மை ஆணைக்குழுவை (Truth Commission) ஆரம்பித்தல்.
  • பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்படுதல்.
  • மலையக மக்களின் நிலைமை இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய ஜீஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுதல்.