ஒரு காலத்தில் தொழிலாளர் ஒற்றுமை மற்றும் தியாகத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக இருந்த மே தினம், இலங்கையில் அரசியல் போட்டி மற்றும் காட்சிக்கான ஒரு மேடையாக மாறியுள்ளது. யாருக்காக மே தினம் என்பதை மறந்துபோகும் அளவிற்கு இச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த ஆண்டு கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் நடைபெறும் மே தின நிகழ்வுகள் எதைச் செய்யப் போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். குறிப்பாக இது தேர்தல் காலம் என்பதால், தமது அரசியல் நலன்களை தக்கவைக்கும் பிரச்சார மேடைகளாக மே தின மேடை அமையக் கூடாது என்பதே அனைவரதும் கோரிக்கை.
இன்று, கொழும்பில் பல்வேறு மே தின அணிவகுப்புகள், பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மே தின நிகழ்வுகளை பாதுகாப்பாகவும் சீராகவும் நடத்த இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்களை வகுத்துள்ளனர்.
தொழிலாளர் தினத்திலிருந்து அரசியல் நிகழ்ச்சி வரை
மே தினம் என்பது நீண்ட காலமாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிபெற்ற நாளாகும் என்பதோடு, அதன் பின்னால் எத்தனையோ பேர் இரத்தம் சிந்தினர், உயிரை தியாகம் செய்தனர். இது தொழிலாளர் சங்கங்களுக்கு எதிரான காலனித்துவ மற்றும் பிந்தைய காலனித்துவ எதிர்ப்புக்கு எதிரான பல ஆண்டு போராட்டத்தின் மூலம் அடையப்பட்டது. பல தசாப்தங்களாக, நியாயமான ஊதியம், பாதுகாப்பான வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை கண்ணியத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களை மதிக்கும் நாளாகும்.
இன்று, மே தினம் பெரும்பாலும் அதிகாரத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள அரசியல் கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். இசைக் களியாட்டங்கள், கட்சி சார்புடைய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், மற்றும் நாசவேலைச் செயல்கள் கூட சில சமயங்களில் உண்மையான குறிக்கோளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.
ஓரங்கட்டப்படும் தொழிலாளர் குரல்கள்
தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளான ஊதியப் பிரச்சினை, நிலையற்ற வேலைவாய்ப்பு மற்றும் நிராகரிக்கப்படும் உரிமைகள் போன்றன தொடர்பாக, இந்நாளில் மிகக் குறைந்த கவனத்தையே பெறுகின்றன.
இடதுசாரி கொள்கை கொண்டவர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி மார்க்சிய சின்னங்களைப் பயன்படுத்தினாலும், தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க சில முதலாளித்துவக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதால் சவால்களை எதிர்கொள்கின்றது. அதே நேரத்தில், போராட்டம் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒட்டுமொத்த சூழல் இன்னும் சவாலானது.
சிவில் சமூகத்தவர்களின் குரல்களை நசுக்கும் வகையிலான சட்டங்கள், துன்புறுத்தல் மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் ஒன்றுகூடும் உரிமையையும் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.. உதாரணமாக, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், எமது பேச்சு சுதந்திரத்தை இணைய வெளியில் வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கான விரிவான அதிகாரங்களை அதிகாரிகளுக்கு வழங்குகிறது. இதனால், தற்காலத்தில் ஒன்றுகூடுதல், ஒழுங்கமைத்தல் போன்ற விடயங்களில் நெருக்கடி நிலை ஏற்படுகின்றது.
பொருளாதார யதார்த்த நிலைகள்
2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான குறிகாட்டிகள் நல்ல நிலையில் உள்ளபோதும், பல இலங்கையர்களின் வாழ்க்கை சவாலானதாகவே உள்ளது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டின் வறுமை விகிதம் கிட்டத்தட்ட 26% ஆக உயர்ந்துள்ளது. மேலும் பணவீக்கம் அதன் உச்சத்திலிருந்து குறைந்திருந்தாலும், முக்கிய உணவு விலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகவே உள்ளன. தனியார் துறையின் குறைந்தபட்ச ஊதியம் மாறாமல் உள்ளது. அண்மையில், இதனை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட போதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகளில் காணப்படும் பலவீனத்தை அடையாளம் கண்டு நிவர்த்திப்பதே இங்கு அவசியமாகும். அதேநேரத்தில் நிதியியல் ரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக அரசதுறை சம்பள உயர்வுகளும் குறைவாகவே உள்ளன.
தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்தல்
அரசியல் கட்சிகளின் நாடகங்களுக்கு அப்பால் தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளான நிலையான, சிறந்த ஊதியங்கள், தொழில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பணியிடங்கள் என்பதை கருத்திற்கொண்டு, அதற்கான பொறிமுறைகளை செயற்படுத்த வேண்டும்.
அடக்குமுறை சட்டங்களும் கண்காணிப்பும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை திறம்பட ஒழுங்கமைப்பதைத் தடுக்கின்றன. வலுவான மற்றும் சுறுசுறுப்பான தொழிலாளர் இயக்கத்திற்கு, இந்த கட்டுப்பாடுகளை நீக்குவது மிகவும் முக்கியம். மே தினம் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கான ஒரு மேடையாக மாறுவதற்குப் பதிலாக, ஒற்றுமை மற்றும் அநீதிக்கான எதிர்ப்பின் நாளாக அமைய வேண்டும்.
தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுடைய தொழில் நிலைமைகள் மற்றும் உரிமைகளுக்கான பொறிமுறைகளை கட்டமைப்பதே மே தினத்தின் உண்மையான அர்த்தத்தை மீட்டெடுப்பதாக அமையும்.
கடந்த கால மே தின வரலாற்றை நாம் பார்த்தால், மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டங்களும் பேரணிகளும் உழைக்கும் வர்க்கத்தினரின் நலன் சார்ந்தே காணப்பட்டன. தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் உயர்வடைய வேண்டுமாயின் முதலாளித்துவ கொள்கையை நீக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோஷமாக காணப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தை ஆதரிக்கும் கொள்கையை கொண்டவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். அவ்வாறான பின்னணியைக் கொண்டவர்கள் இணைந்து, இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் நாட்டை ஆளும் தரப்பாக மாறியுள்ளனர். இந்நிலையில், அவர்களுடைய கொள்கைக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையையும் வேற்றுமையையும் இனங்காணக்கூடியதாக இன்றைய அவர்களுடைய கூட்டம் அமையும்.
செய்தியாக்கம் – கே.கே.