சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பகிடிவதையால் அவமானம் தாங்க முடியாது அவர் இந்த முடிவை எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் கற்கும் குறித்த மாணவன்,
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அதன்பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பகிடிவதை என்ற பெயரில் அவர் முகங்கொடுத்த சம்பவத்தால் அவமானம் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக மாணவனின் தந்தையும் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக ஊடகத்தில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த மரணம் பகிடிவதையால் நிகழ்ந்தது என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சு, குறித்த மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விசாரணை முடிவடைந்த பின்னர், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.