சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்தார்.
இந்தக் குழு சிரேஷ்ட பேராசிரியர் ஏ.ஏ.வை. அமரசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கபில ரத்நாயக்க மற்றும் சட்டத்தரணி வை. எஸ். சந்திரசேகர் ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த மாணவரின் மரணம் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து, பொருத்தமான அவதானிப்புகள் மற்றும் முடிவுகளை உடனடியாக வழங்குமாறு குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சரித் தில்ஷனின் குடும்பத்தினர் நீதிக்காக உணர்ச்சிபூர்வமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது மகன் கடுமையான பகிடிவதைக்கு ஆளானதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏப்ரல் 26 ஆம் திகதி தனது மஹாபொல உதவித்தொகை தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, தனது மகன் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் சரித்தின் தாய் தெரிவித்தார்.
“அவர்கள் தனது மகனை துன்புறுத்தினர், அடித்தார்கள், தள்ளினார்கள்… மகன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, என்னைப் பார்க்கக்கூட இல்லை. பின்னர் அவர்கள் மகனின் ஆடைகளைக் களையச் செய்ததை கண்டுபிடித்தோம்.
எனினும், தனது மகன் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் தனக்கு மன அழுத்தம் இருப்பதாக அவர் எழுதியிருந்தார், ” என்று தாய் கண்ணீருடன் கூறினார்.
“என் மகனுக்கு நடந்தது வேறு எந்த பிள்ளைக்கும் நடக்கக்கூடாது என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். தயவுசெய்து அவருக்கு நீதி வழங்குங்கள்,” என்று தாயார் மேலும் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 28 ஆம் திகதி வீடு திரும்பிய பின்னர், சரித் தன் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும், அவர் பல்பகலைக்கழகத்தில் அனுபவித்த சம்பவத்தை விளக்கியதாகவும் சரித்தின் அத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
“அவர்கள் எவ்வளவு மோசமாக நடத்தினார்கள்,அவரை எப்படிக் கட்டிப்போட்டார்கள், ஷார்ட்ஸ் அணியச் செய்தார்கள், ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று மற்றவர்கள் முன்னிலையில் அடித்தார்கள் என்று சரித் என்னிடம் கூறினார் என்று அத்தை கூறியுள்ளார்.
இதனிடையே, சரித்தின் தந்தை, தனது மகன் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் படித்த காலத்தில் ராகிங் செய்யப்பட்டதாக வெளிப்படுத்தினார்.
“தனது மகன் தொழில்நுட்ப பொறியியல் படித்து, லக்சபானா மின் நிலையத்தில் பணிபுரிய ஆசைப்பட்டான், பெருமையுடன் சீருடையில் வீட்டிற்கு வருவார் என்று நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தோம்.
அதற்கு பதிலாக, நாங்கள் அவரை இப்படி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை, சரித்தின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என சக மாணவர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்கல்வி அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளதாகவும், பகிடிவதை உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
இலங்கையில் பகிடிவதை ஒரு குற்றவியல் குற்றமாகவே உள்ளது, மேலும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், ஏப்ரல் 29ஆம் திகதி கம்பளையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.