‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது.
சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.
இவ்வாறு சூதுகவ்விய இரு துருவ, ஒரு துருவ காலத்தைத் தாண்டி பல்துருவ உலக ஒழுங்குக்குள் பயணிக்கப்போகின்ற தற்காலமும் எதிர்காலமும் ஈழத்தமிழர் தேசத்துக்குத் தர்ம வெற்றியை ஈட்டித் தர வேண்டுமானால் சிங்கள இடதுசாரிகளில் தங்கியிராத ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமும் பலமும் வாய்ந்த சமவுடைமை மக்கள் இயக்கம் வடக்கு கிழக்கில் கட்டியெழுப்பப்படவேண்டும்.
இதுவரை காலமும் இலங்கைத் தீவுக்குள் வளர்வதும் தேய்வதுமாயிருந்த மார்க்சிய, கம்யூனிச, சமவுடைமைப் போக்குகள் தென் இலங்கைப் பேரினவாதத்துக்குப் பலிக்கடா ஆக்கப்பட்டது வரலாறு.
இதற்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களின் வரலாறே சாட்சி.
பேரினவாதச் சிந்தனை முன்போல இலங்கைத் தீவில் தற்போது இல்லை என்ற வாதத்தைப் போலித்தனமாகப் பலர் முன்வைத்துவருகிறார்கள். பலர் அதை நம்பியும் வருகிறார்கள்.
இதற்கான சூழலை இலங்கைத் தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சிக்கல் உருவாக்கி விட்டது என்று ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் தாமாகவே நம்புவதும் அல்லது அவர்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதம் இறுதியில் ஈழத்தமிழர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுவதற்கும் ஏமாற்றப்படுவதற்குமே வழி கோலும்.
2022 இல் டைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2022 இல் இடம்பெற்ற காலிமுகத் திடல் போராட்டத்துடன் அமைப்பு மாற்றம் (System Change) என்ற கோசத்தில் தென்னிலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், பேரினவாதத்துக்குத் தேவையான புதிய உலக ஒழுங்கைக் கையாளும் அரச கட்டுக்கோப்பு (Body Politic) உருவாக்கப்பட்டுள்ளமையே அன்றி வேறொன்றுமல்ல.
புவிசார் அரசியல் (Geopolitics) என்ற சொல்லை 1916 இல் அறிமுகப்படுத்திய சுவீடன் நாட்டு அரசறிவியலாளரும் புவியியலாளருமான யுகான் ருடோல்ப் செல்லேன் என்ற அறிஞர் உயிரியல் அரசியல் (Biopolitics) என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தியவர்.
புவிசார் அரசியலைக் கையாள்வதற்கு வேண்டிய உயிரியல் அரசியலை சிங்கள தேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. காலத்துக்கேற்ப உலக அரசியலைக் கையாளும் நோக்கோடு தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் அது தீவுக்குள் அமைப்பு மாற்றம் ஊழல் எதிர்ப்பு போன்ற வேறு விதமான வெளிப்படுத்தல்களை அவ்வப்போது சூழலுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும்.
தென் இலங்கைப் பேரினவாதத்தின் உயிரியல் அரசியலையும் புவிசார் அரசியலையும் அரச கட்டுக்கோப்பையும் ஒரு சேர விளங்கிக்கொள்ளும் தன்மை ஈழத்தமிழர் தேசத்தினருக்கு அவசியம் தேவையானது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தென் இலங்கையுடன் ஈழத்தமிழர்கள் சேர்ந்து பயணிக்க முடியும் என்ற செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமையக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
தமிழர்கள் தென் இலங்கையுடன் சேர்ந்து வாழ முடியும் என்ற செய்தியை சர்வதேசத்துக்குச் சொல்ல கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட உத்திகளின் தொடர்ச்சிதான் இது. புதிதல்ல.
ஆனாலும் தென் இலங்கைப் பேரினவாத சக்திகள் போலிச் சோஷலிசத்தை மார்க்சியவாதிகள் போல உள்வைத்து, தாராண்மைவாத மேற்குலகோடு ஒத்தியங்கும் மேலங்கியைப் போர்த்தி உலக அரசியலைக் கையாளத் தேவையான அரச கட்டுக்கோப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தான் தற்போது அனுரகுமார ஜனாதிபதி ஆகியுள்ளதற்கான விஞ்ஞான விளக்கம்.
அவ்வப்போது உண்மையான முற்போக்குவாதிகளாகத் தென்பட்ட சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களில் பெருமளவினர் பேரினவாதத்துக்குப் பலியாகிவந்துள்ள வரலாறு தருகின்ற படிப்பினை என்னவென்றால், தென்னிலங்கை இடதுசாரியத்திலும் முற்போக்குத் தனத்திலும் தங்கியிராத தனித்துவத்தோடு ஈழத்தமிழருக்கான புரட்சிகர மக்கள் இயக்கம் ஜனநாயக வழியில் கட்டமைக்கப்படவேண்டும் என்பதாகும்.