கல்வி அமைச்சிற்குள் இடம்பெற்ற ஏராளமான முறைகேடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (02) இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக அதிபர், ஆசிரியர் நியமனங்களும் முறையாக நடைபெறவில்லை என தெரிவித்த பிரதமர், கல்வி முறையை சீர்செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அத்தோடு, ஆசிரியர் வெற்றிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில் – “மோசடிகளை சமூகம் நிராகரிக்க வேண்டும். பாடசாலைகள், வைத்தியசாலைகள், வேலைதளங்கள், அலுவலகங்கள், கடைகள் என எல்லா இடங்களிலும் மோசடியை மக்கள் எதிர்க்க வேண்டும். குறிப்பாக எமது இளைஞர் குழுக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து, செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன. கனவுகளைக் காண மட்டுமல்ல, அவற்றை நனவாக்கவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
அண்மையில், ஒரு பல்கலைக்கழக மாணவரின் துயரச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டோம். நாங்கள், அமைச்சில் போன்றே பொலிஸார் இந்த விடயத்தை விசாரித்து வருகிறோம். இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கும் பல்கலைக்கழக முறைமைக்கும் இடையிலான பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவைக் காட்டுகின்றன. அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். திட்டங்கள் இன்றி இயங்கிய நிறவனங்களை கட்டியெழுப்ப வேண்டும்.
மக்களுடைய வரிகள் இதுவரை சிலரின் பைகளுக்கே சென்றுள்ளது. நீங்கள் சேவைக்காக வழங்கும் வரியை அவ்வாறு மோசடியாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” எனக் குறிப்பிட்டார்.