பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மரணித்துள்ள நிலையில், பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிராக இந்த மாணவன் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த நிலையில், அவர் கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் 4ஆம் வருட மாணவர்கள் இவ்வாறு தாக்கியுள்ளனர்.
சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் தாக்கியுள்ளதாக குறித்த மாணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சம்பவம் குறித்து விசாரிக்க விசேட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ்வாறான தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.