“இந்த இடத்தில்தான் அமெரிக்கப் படைகள் தோற்கடிக்கப்பட்டன” என்று, கடந்த கோடை காலத்தில் கனடாவின் Niagara-on-the-Lake நகரில் குதிரை வண்டியில் நாங்கள் பயணித்தபோது, சுற்றுலா வழிகாட்டி எம்மிடம் கூறினார். அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு நான் வியப்புற்றேன். கனடாவிற்கு புதிதாக வந்துள்ள நான், சக்திவாய்ந்த அண்டை நாடொன்றை ஒரு காலத்தில் கனடா எவ்வாறு எதிர்கொண்டது என்பதைப் பற்றி தெரிந்துகொண்டேன்.
இந்த சிறிய மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நகரத்தின் வரலாறு திடீரென்று எனக்கு மிகவும் அண்மித்ததாகத் தோன்றியது. 1813ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இரவில் பிரிட்டிஷ் படைகள் தாக்குதல் நடத்தி, அமெரிக்க வீரர்களை தோற்கடித்து, நயாகரா கோட்டையைக் கைப்பற்றின. இந்த வெற்றி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நயாகரா நதி முகத்துவாரத்தின் மீது ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்தது. பின்னர் கனடாவாக மாற்றம் பெற்றதற்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது.
Niagara-on-the-Lake நகரம், இன்று அமைதியே உருவானதாய் காட்சியளிக்கின்றது. வீதிகளில், வண்ணமயமான பூந்தோட்டங்கள் வரிசையாக நிற்கின்றன. சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலையைக் கொண்ட வரலாற்று கட்டிடங்கள் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கின்றன. அமைதியான ஒன்ராறியோ ஏரிக் கரைகள் தொலைதூரம் வரை நீண்டுள்ளன. போர் பதட்டம் நிறைந்து காணப்பட்ட இடங்கள், தற்போது வைன் சுற்றுலாக்கள் (Wine tours), திரையரங்குகள் மற்றும் சிறிய அழகான கடைகளால் சூழப்பட்டுள்ளன. இவ்வாறு அமைதியான சுற்றுலாப் பிரதேசமாக காட்சியளிக்கும் இடம், ஒரு காலத்தில் கடுமையான சண்டைகள் இடம்பெற்ற பகுதி என்பதை கற்பனை செய்யவும் முடியாதுள்ளது.
எமது சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு அங்குள்ள காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்த போது, 200 ஆண்டுகால போராட்டத்தை எமது கூட்டாட்சித் தேர்தலில் நடந்தவற்றுடன் இணைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
அதிர்ச்சியூட்டும் பெறுபேறு
இந்த தேர்தல் பெறுபேற்றினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2025 கூட்டாட்சித் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியினர் 169 இடங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை (அதற்கு அவர்களுக்கு 172 இடங்கள் தேவைப்பட்டன). ஆனால், லிபரல் கட்சியினர் மோசமாக தோற்பார்கள் என்று பெரும்பாலானவர்கள் நினைத்தபோது, அவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினரை தோற்கடித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ 160 இடங்களை பெற்றிருந்த நிலையில், அதனை விட சிறந்த வெற்றியாக இது உள்ளது. காரணம், அவர்கள் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை கருத்திற்கொள்ளும்போது, இம்முறை கூடுதலாக 9 இடங்களைப் பெற்றுக்கொண்டமையானது விசேட அம்சமாகும்.
2023ஆம் ஆண்டுதான் நான் கனடாவில் வசிக்கத் தொடங்கினேன். ஆனால், காற்று எத்திசை நோக்கி வீசுகின்றதென என்னாலும் உணரமுடிந்தது. வீட்டுச் செலவுகள் அதிகரிப்பு, குற்றச் செயல்கள் அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என எல்லா இடங்களிலும் மக்கள் வேதனையில் வாழ்ந்தனர். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியினர் மீதே அதிக பழி சுமத்தப்பட்டது. அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் அரசாங்கத்தின் செலவு அதிகரித்ததாக மக்கள் விரக்தியுற்றனர். சரியான திட்டமிடல் இல்லாமல் சர்வதேச மாணவர்களை நாட்டிற்குள் அனுமதித்ததாக, அரசாங்கம் மீது பழி சுமத்தப்படுகின்றது. இவ்வாறு வரும் மாணவர்கள் தமது கல்வியை முடித்த பின்னர், உள்ளூர்வாசிகளுக்குச் செல்லக்கூடிய தொழில்களை எடுத்துக்கொள்கின்றனர் என்று மக்கள் உணர்ந்தனர். சுகாதார சேவையை பெற்றுக்கொள்ள நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல், மருத்துவர் பற்றாக்குறை என சுகாதார அமைப்பின் மீதும் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
ஜனவரியில் ட்ரூடோ பதவி விலகி கார்னி பொறுப்பேற்றபோது, கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியினரே மிகவும் முன்னிலையில் இருந்தனர். அதன் தலைவரான பியர் பொய்லிவ்ரே அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்படுவார் என்ற உறுதியான நம்பிக்கை காணப்பட்டது.
மாற்றம் விரைவாக நடந்தேறியது. பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியை இராஜிநாமா செய்வதாக, 2025 ஜனவரி 6ஆம் திகதி ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். பல மாதங்களாக நீடித்த அரசியல் நெருக்கடி மற்றும் அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிகரித்து வந்த கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவுசெய்யும் வரை, தான் பதவியில் நீடிப்பதாக ட்ரூடோ உறுதியளித்திருந்தார்.
கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை, பெப்ரவரி பிற்பகுதியில் இருந்து மார்ச் தொடக்கம் வரை கட்சி விரைவாக நடத்தியது. 2025 மார்ச் 9ஆம் திகதி, கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. கூட்டாட்சித் தேர்தலுக்குத் தயாராகவும், கட்சியின் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தவும் அவருக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே காணப்பட்டது.
நடந்த மாற்றம் என்ன?
உள்ளூர் பிரச்சினையை விட அதிகமானது
ஏதோ ஒரு பெரிய விடயம் நடந்துகொண்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்தமை, கனடாவிற்கு புதிய அச்சுறுத்தல்களை கொண்டுவந்தது. அவர் வெறுமனே கனேடியப் பொருட்களுக்கு நியாயமற்ற வரிகளை மீண்டும் கொண்டுவந்ததோடு நிற்கவில்லை. கனடா “51வது மாநிலமாக” மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் திடுக்கிடும் கருத்துக்களைத் தெரிவித்தார். அத்தோடு, தனது உரைகளில் கனடாவை அடிக்கடி கேலி செய்தும் வந்தார்.
இவை வெறும் வாய்வார்த்தைகள் மாத்திரமல்ல. கனேடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் உண்மையான பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவை காணப்பட்டன. அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள், தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியது. டிரம்பின் வரிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் கனேடிய தொழிற்துறைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தன.
தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டு வருகையில், மக்கள் கருத்துக்களில் ஒரு மாற்றத்தை அவதானித்தேன். வீட்டுச் செலவு இன்னும் அதிகமாக அதிகரித்தது. மளிகைப் பொருட்களுக்கான விலையும் பாரியளவில் உயர்ந்தது. வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு வரி குறைப்புகளையும் உதவி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனைத்து முக்கிய கட்சிகளும் உறுதியளித்தன. ஆனால், உலகில் கனடாவிற்கு காணப்படும் நிலை மற்றும் அமெரிக்காவுடனான அதன் உறவு குறித்து ஆழ்ந்த கரிசனைகள் காணப்பட்டன.
ஆபத்தான நிலையில் ஒரு நாட்டின் பெருமை
மார்க் கார்னி இதைப் புரிந்துகொண்டதாகத் தோன்றியது. உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிசெய்வதில் பியர் பொய்லிவ்ரே பிரதானமாக கவனம் செலுத்தினாலும், உலக அரங்கில் கனடாவுக்காக செயற்படுவது பற்றி கார்னியே கருத்துக்களை முன்வைத்தார்.
“கனடா ஒருபோதும் அமெரிக்காவிற்கு அடிபணியாது” என கார்னி தனது பிரச்சாரத்தில் அடிக்கடி கூறினார். இவ்வாறான, கனடாவின் இறையாண்மை குறித்த அவரது உறுதியான நிலைப்பாடு வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு, தேர்தல் பிரச்சாரம் முழுவதும் கார்னி ஒரு வலுவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். வெற்றிபெற்ற பின்னர் அவர் நிகழ்த்திய உரையில், “அமெரிக்கா எமது நிலம், வளங்கள், நீர் என எமது தேசத்தின் மீதே கண்வைத்துள்ளது என நான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றேன்” என தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தினார். “இவை வெறும் அச்சுறுத்தல்கள் மாத்திரமல்ல. எம் மீதான கட்டுப்பாட்டை ஜனாதிபதி டிரம்ப் பெற்றுக்கொள்ள, எம்மைப் பிரிக்க விரும்புகின்றார். அது ஒருபோதும் நடக்காது” என்றார்.
கனேடிய வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கி ஆகியவற்றின் தலைவராக அவர் முன்பு செயற்பட்ட அனுபவம், அவர் மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரித்தது. இதற்கு முன்பு உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளித்து அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்த ஒருவர் இருக்கின்றார்.
மக்கள் பேசுகின்றனர்
தேர்தல் தினத்தன்று, 68.65 வீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். 1993ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான அதிகமான வாக்குப்பதிவு இதுவாகும். வெளிப்பட்ட செய்தி தெளிவாக காணப்பட்டது. அதாவது, கனேடியர்கள் தேசிய அடையாளம் குறித்த தமது கருத்துக்களை வெளிப்படுத்த, தமது உள்ளூர் பிரச்சினைகளில் சிலவற்றை ஒதுக்கி வைத்தனர்.
“வீட்டுச்செலவு தொடர்பாக நான் இன்னும் கவலையடைகின்றேன்” என, வாக்குப்பதிவிற்குப் பின்னர் எனது அயலவர் ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார். ஆனால், அவசியமான சந்தர்ப்பத்தில் ட்ரம்பை எதிர்த்து நிற்கும் ஒரு பிரதமர் அவசியம் என்பது பற்றி நான் அதைவிட கவலையடைகின்றேன்” என்றார்.
பிராந்தியத்தின் தேர்தல் முடிவுகள் ஒரு சுவாரஷ்யமான செய்தியை கூறிச் சென்றுள்ளன. நகர்ப்புறங்களை லிபரல் கட்சியினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் வெற்றிபெற சிரமங்களை எதிர்கொண்ட பகுதிகளிலும், எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியினர், தாம் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வலுவான நிலையில் இருந்தனர். எனினும், எதிர்பார்த்தவாறு ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் வெற்றிபெற முடியவில்லை.
முன்னோக்கிச் செல்லும் வழி
புதிய அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றது. பலருக்கு வீட்டுச்செலவு இன்னும் கட்டுப்படியாகவில்லை. பணவீக்கம் அனைவரின் நிதி நிலைமைகளையும் பாதித்துள்ளது. சுகாதார துறைக்கு அதிகளவான நிதி அவசியமாகின்றது. கனடாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளரான அமெரிக்காவுடனான உறவுகளை வழிநடத்துவது சவாலானதாக இருக்கும்.
கார்னி ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பார். அதனால், சட்டங்களை இயற்றுவதற்கு அவருக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். இது உண்மையில் கனடாவிற்கு பயனளிக்கும் என்பதோடு, கட்சி எல்லைகளுக்கு அப்பால் அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
தனது வெற்றி உரையில், கார்னி நேரடியாகவும் நேர்மையாகவும் பேசினார். “அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியை நாம் கடந்து வந்துவிட்டோம். ஆனால் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. நாம் எமது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மிக முக்கியமாக, நாம் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ள வேண்டும்“ என்றார்.
ட்ரம்ப் உடனான தவிர்க்க முடியாத சந்திப்பு தொடர்பாக அவர் நேரடியாக உரையாற்றினார். “நான் ட்ரம்பை சந்திக்கும் போது, இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவைப் பற்றி கலந்துரையாடுவோம். மேலும், அனைத்து கனேடியர்களும் வளமாக வாழ்வதை உறுதி செய்வதற்கு அமெரிக்காவிற்கு அப்பால் பல மாற்று வழிகள் எம்மிடம் உள்ளன என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வோம்” என்றார்.
வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது, நாட்டிற்குள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கார்னி வலியுறுத்தினார். “நெருக்கடியான சந்தர்ப்பங்களில் ஒற்றுமையாக செயற்படுவது மிக முக்கியமானது. அத்தோடு, தீர்க்கமாகவும் நோக்கத்துடனும் செயற்படுவது முக்கியமாகும். அதனைத்தான் நாங்கள் செய்வோம்” என்றார்.
சமூக ஊடகத்திலும் அவர் ஒரு துணிச்சலான அறிக்கையை வெளியிட்டிருந்தார். “அவர்கள் பிளவுபட்டு பலவீனமாக மாறலாம்” அமெரிக்காவை சுட்டிக்காட்டி கார்னி இதனைக் குறிப்பிட்டிருந்தார். “ஆனால் இது கனடா. இங்கு என்ன நடக்கின்றதென நாமே தீர்மானிக்கின்றோம்” என்றார்.
“எமது பெறுமதிகளை பிரதிபலிக்கும் ஒரு கனடாவை நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் நித்தியமான ஒரு கனடா – கனடா நீடூழி வாழ்க!” என்று கூறி, அவரது உரையை உறுதியாவும் உணர்வுபூர்வமாகவும் நிறைவுசெய்தார். டிரம்பின் இணைப்புச் சொல்லாடலுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் “#Never” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தினார். இது அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு போராட்டமாக மாற்றப்பட்டது.
வரலாற்றுப் பாடம்
கோடை தினமொன்றில் Niagara-on-the-Lakeஇல் நடந்த அந்த உரையாடலை நினைத்துப் பார்க்கும்போது, இப்போது அந்த தொடர்பை என்னால் தெளிவாகக் காண முடிகின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், கனேடியர்கள் போரிட்டு தமது நாட்டைக் காத்தனர். இன்று, தமது வாக்குகளால் அவர்கள் அதனைச் செய்துள்ளனர்.
இறுதியில், தாங்கும் திறன், வீட்டுச் செலவுகள் மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் பற்றிய கரசனைகள் என்பன உண்மையாக காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்திப்பதற்கு ஒவ்வொரு கட்சியும் திட்டங்களைக் கொண்டிருந்தன. ஆனால் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக வலுவாக நிற்பது என்ற செய்தி, ஏனைய அனைத்தையும் விட வெற்றிபெற்றது.
கார்னியையும், அவரது வலுவான, சுதந்திரமான கனடாவையும் தேர்ந்தெடுத்ததன் மூலம், வாக்காளர்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளை புறக்கணிக்கவில்லை. எல்லைகளை கடந்து வரும் அழுத்தங்களின் கீழ் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், கனேடிய வழியில் தீர்வு காண வேண்டும் என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.
அந்த சுற்றுலா வழிகாட்டி அப்போது தெரிவித்த கருத்து, இப்போது மிகுந்த அர்த்தத்தைக் கொடுக்கின்றது. கனேடியர்கள் எப்போதும் தமது இறையாண்மையை மதிக்கின்றனர். அந்த நீண்ட கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே இந்த தேர்தலாகும்.
இவற்றையெல்லாம் பார்க்கும் கனடாவின் ஒரு புதிய பிரஜையான என்னால் உதவ முடியாவிட்டாலும், நான் வாழும் நாட்டின் அமைதியான வலிமையையும் உறுதியையும் நினைத்து பெருமையடைகின்றேன்.
அருண் ஆரோக்கியநாதர்