இடதுசாரி தலைமைத்துவமும் சட்டத்தின் ஆட்சியும் – அநுரவிற்கு காத்திருக்கும் சவால்

0
20
Article Top Ad

கொழும்பில் நடந்த பிரம்மாண்டமான மே தின பேரணிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததையும், பயணிகள் வீதியோரத்தில் நின்றும் அமர்ந்தும் உணவுண்டதையும் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக பல கரிசனைகளை எழுப்பியுள்ளது.

பெரும்பாலான நாடுகளைப் போலவே, இலங்கையிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும், அவசரகால சூழ்நிலைகளைத் தவிர, வாகனங்களை நிறுத்துவதையோ அல்லது பயணிகள் இறங்குவதையோ கண்டிப்பாகத் தடை செய்கின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்கூட, விபத்துக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் அபாயம் காரணமாக பயணிகள் வாகனத்தை அதிவேக வீதியில் விட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில், இந்த விதிமுறைகளை தெளிவாக மீறுவதாக, அண்மைய சம்பவம் பதிவாகியுள்ளது.

கடமையை செய்ய தவறினார்களா பொலிஸார்?

சம்பவ இடத்தில் பொலிஸார் இருந்துள்ளனர் மற்றும் அவர்கள் பேருந்துகளை நிறுத்த அனுமதித்துள்ளனர் என்பதே இங்கு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை காக்கவேண்டிய பொலிஸார், சட்டத்தை மீறுவதற்கு உதவினார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறித்த பேருந்துகளில் பயணித்தவர்கள் அரசாங்க ஆதரவாளர்கள் என்பதால் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருப்பதாகவும், பாரபட்சமற்ற தன்மை மற்றும் பொலிஸ் துறைக்குள் காணப்படும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

சிலர், வாகன நிறுத்துமிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போதிய இடமில்லை என்பதால் இவ்வாறு நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இது விதிமீறல் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

 ஜனாதிபதியின் கண்டனமும் பொறுப்புக்கூறலுக்கான அழைப்பும்

சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவும் இந்த விடயம் தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது  முற்றுமுழுதாக விதிமீறல் என்பதை சந்தேகமின்றி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இவ்வாறான ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

பேருந்து சாரதிகள் மீது மட்டுமன்றி, அவ்வாறு நிறுத்த அனுமதித்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிகழ்வு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு நியமிக்கப்பட்ட அமைப்பாளர் இருப்பதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் முறையான மாற்றத்திற்கான ஒரு தளத்தில் பிரச்சாரம் செய்த ஒரு அரசியல் தலைவர் என்ற ரீதியில், அவரது இந்த நிலைப்பாடு குறிப்பிடத்தக்கதாகும். தனது சொந்த கட்சி மற்றும் அரசாங்கத்திற்குள் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதன் மூலம், அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

கொள்கைகள் மற்றும் அரசியல் நம்பகத்தன்மைக்கான சோதனை

அரசியரல் சார்புநிலை மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பழைய அரசியல் கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், அரசியல் ரீதியாக சவாலாக இருந்தாலும் கூட, சட்டத்தை பாரபட்சமின்றி பயன்படுத்த முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இலங்கை கலாச்சாரத்தில் அவ்வாறான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, செய்யவும் மாட்டார்கள் என ஏற்கனவே சமூக ஊடகங்களில் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதற்குக் காரணமும் உண்டு.

வரலாற்று ரீதியாக இலங்கையிலும் பல நாடுகளிலும், பொலிஸ் துறை பெரும்பாலும் ஆளும் அரசியல் ஆட்சியின் நலன்களைப் பாதுகாக்கவே செயற்பட்டு வருகின்றது என்பது கடந்த கால உதாரணங்களின் ஊடாக தெரியும் கண்கூடு. சில சமயங்களில் அரசாங்க ஆதரவாளர்களுக்கு நன்மை பயக்கும் அல்லது எதிர்ப்பை அடக்குவதற்காக சட்டத்தை தாண்டி செயற்படுகின்றமை அல்லது வளைக்கின்றமை போன்றன இடம்பெற்றன. இது அதிகாரத்தில் இருப்பவர்கள் – அவர்களின் அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் – தங்கள் சொந்த ஆதரவாளர்களைக் காப்பதாகவும், அரசியல் நன்மைக்காக சட்ட அமுலாக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் கருதப்படும் ஒரு வடிவத்தை உருவாக்கியுள்ளது.

இலங்கையில், அரசியல் ஸ்தாபனத்தின் நலன்களுக்காக பொலிஸார் செயற்படுவதற்கு நீண்ட வரலாறு உள்ளது. சட்டம் அல்லது பொது நலனை விட, ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்காக அதிகாரிகள் பதவி உயர்வுகளையும் பாதுகாப்பையும் பெறுகின்றார்கள். அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் கைங்கரியத்தை செயற்படுத்துகின்றனர் என்றும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாச்சாரத்தை வளர்க்கின்றனர் என்பதுமான பொதுக் கருத்துக்கு இது வழிவகுத்துள்ளது.

எனவே, இடதுசாரி அல்லது சோசலிசவாதியாக தம்மை அடையாளப்படுத்தும் ஜனாதிபதி அநுரவிற்கு, தமது சொந்த கட்சியான தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்களை அதிவேக நெடுஞ்சாலை விதிகளை மீற அனுமதித்த பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, காலங்காலமாக வேரூன்றி காணப்படும் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. தனது சொந்த ஆதரவாளர்களையோ அல்லது அவர்களை ஆதரித்த பொலிஸ் அதிகாரிகளையோ பாதுகாப்பதற்கு பதிலாக, அவர் பாரபட்சமற்ற சட்ட அமுலாக்கத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அணுகுமுறை வழக்கமான அரசியல் சார்பு முறைக்கு சவால் விட்டுள்ளது மற்றும் ஒருவரின் சொந்த அரசியல் தளத்தைப் பாதுகாக்க அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தும் மரபிலிருந்து விலகுவதையும் குறிக்கின்றது. இதை செயற்படுத்துவராக இருந்தால், அவரது கொள்கையில் அவர் கொண்ட உறுதியை அது வெளிப்படுத்தும்.

சட்டத்தின் ஆட்சியும் பொறுப்புக்கூறலும்

ஜனாதிபதியின் எதிர்வினையானது, சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்பதற்கான முன்னுதாரணத்தை வெளிப்படுத்துகின்றது. இது தேசிய மக்கள் சக்தியின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் முக்கிய கொள்கையாகும். தங்கள் சொந்த ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தத் தவறிய பொலிஸார் மீது நடவடிக்கை எடுத்தால், சட்ட அமுலாக்கத்தின் நடுநிலைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கை வலுப்படும்.

தேசிய மக்கள் கட்சியின் அமைப்பாளர்களை பொறுப்புக்கூற வைப்பதன் மூலம், உள்ளக விமர்சனங்களுக்கு ஆளானாலும் கூட, தனது கட்சி ஒழுக்கமின்மையையோ அல்லது பொதுப் பாதுகாப்பை புறக்கணிப்பதையோ பொறுத்துக்கொள்ளாது என்பதை அரசாங்கம் நிரூபிக்க முடியும்.

இந்த பேருந்து நிறுத்தல் விவகாரம், வெறுமனே போக்குவரத்து விதிகளை மீறுவது மட்டுமல்ல – தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உண்மையிலேயே நேர்மையானதா மற்றும் அதன் சொந்த மதிப்புகளைப் பின்பற்றுகின்றதா என்பதற்கான ஒரு சோதனையாகும்.

தனது அரசியல் வட்டத்திற்குள் இருப்பவர்கள் மீது கூட ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவிப்பதை அவரது ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அது நடைபெற்றால், அரசியல் சார்பு நிலையால் சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நாட்டில், இந்த தருணம் மிகவும் பொறுப்புணர்வு மற்றும் சமத்துவமான ஆட்சி முறையை நோக்கிய அர்த்தமுள்ள நகர்வைக் குறிக்கலாம்.

செய்தியாக்கம் – கே.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here