இலங்கையின் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 8,287 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுவதோடு, வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இத்தேர்தலில் 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களும், ஏனைய ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, சமூக சேவைகள் திணைக்களத்தால் பிரதேச செயலாளர்கள் மூலம் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை, இவை யாவும் இல்லாவிட்டால் புகைப்படத்துடன் கூடிய சான்றுப்படுத்தப்பட்ட ஆவணம், தேர்தல் ஆணைக்குழுவால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, தேர்தல் அலுவலகங்களில் இருந்து தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்படும் அடையாள அட்டை இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என மக்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக காலை 10 மணிவரை அநேகமான இடங்களில் 20 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது.
தற்போதைய வாக்களிப்பு சதவீதங்களின் அடிப்படையில், கடந்த தேர்தல்களைப் போல மக்கள் இந்த தேர்தலில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே தென்படுகின்றது.