இலங்கையில் மே 6 அன்று நடைபெற்ற 2025 உள்ளூராட்சித் தேர்தல், ஒரு மிகப்பெரிய செய்தியை கூறுகின்றது. ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) சுமார் 47% வாக்குகளுடன் தேசிய ரீதியில் முன்னிலையில் உள்ளது. ராஜபக்ஷக்களின் கோட்டையாக இருந்த தங்காலை நகர சபை போன்ற முக்கிய சபைகளை வென்றுள்ளது. இதுவரை 268 சபைகளின் முடிவு வெளியாகியுள்ளதில், அதில் 103 சபைகளில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஆனால் பல உள்ளூர் சபைகளில் முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. சுமார் 20 சபைகளில் ஆளும் கட்சியும் எதிரணிகளும் சமமான ஆசனங்களை வென்றுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன போன்ற பிற கட்சிகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பெற்றுள்ளன. குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள உள்ளூர் சபைகளில் பெரும்பாலானவை தமிழரசுக் கட்சியின் வசம் சென்றுள்ளன.
தமிழ் பிரதேசங்களின் நிலைவரம்
இப்போதைக்கு வெளியான இறுதி முடிவுகளின் பிரகாரம், மன்னார் மாவட்டத்தில், பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
50 வீதத்தை பெறாவிட்டால் என்ன நடக்கும்?
கட்சிகள் 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால், தவிசாளர், உப தவிசாளர்களை தெரிவுசெய்யுமாறு சம்பந்தப்பட்ட கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கும். எந்தவொரு கட்சியும் 50 வீதத்தை பெறாவிட்டால், சம்பந்தப்பட்ட உள்ளூர் சபைகளின் உறுப்பினர்களின் ஏகோபித்த இணக்கப்பாட்டுடன் தவிசாளர் பிரதி தவிசாளர்கள் தெரிவுசெய்யப்படுவர் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், எதிரணிகளுடன் கூட்டிணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை பெரும்பாலான சபைகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது, அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களுக்கு வழிவகுக்கும்.
கடந்த காலங்களுடனான ஒப்பீடு
கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதியான வெற்றியை பதிவுசெய்தது, இதனுடன் ஒப்பிடும்போது, உள்ளூர் சபைகளின் முடிவுகள், வாக்காளர்களிடமிருந்து மிகவும் கலவையான செய்தியையே வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் தேசிய அளவில் அரசாங்கத்தை ஆதரிக்கும் அதே வேளையில், தமது பிரதேசம் சார்ந்து வருகையில் தமது விருப்பம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். தேசிய வெற்றிகள் எப்போதும் உள்ளூர் கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்காத கடந்த கால முறைகளை இது பிரதிபலிக்கிறது.
மக்கள் கூறும் செய்தி
இலங்கையில் புரையோடிப்போயுள்ள அரசியல் கலாசாரத்தால் மக்கள் பிளவுபட்டதும், நலிவுற்றதுமே எஞ்சியுள்ளது. குறிப்பாக மாற்றத்தை நோக்கிய வாக்களித்த மக்கள், அந்த மாற்றத்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை உணர ஆரம்பித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிகள், பாதுகாப்பு விடயங்களில் போதிய செயற்பாடுகள்ன முன்னெடுக்கப்படாமை, குற்றங்களுக்கான தீர்வு காணப்படாமை என்பன இவற்றில் சிலவாகும். இந்நிலையில், அரசாங்கம் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற செய்தியை மக்கள் இந்த தேர்தலில் குறிப்பிட்டுள்ளனர். அதையுணர்ந்து வெறும் வார்த்தைகளாலும் அறிக்கைகளாலும் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், விரைவான தீர்வுகளை நோக்கிய பயணம் அவசியம்.

