கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுக்க ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளன. அதனால் மேயரைத் தேர்ந்தெடுக்க மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கோரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையில் (CMC) அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று மொத்தம் 48 இடங்களை வென்றது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 58,375 வாக்குகளைப் பெற்று 29 இடங்களைப் பெற்றது. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 26,297 வாக்குகளைப் பெற்று 13 இடங்களைப் பெற்றது. பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) முறையே 5 மற்றும் 4 இடங்களைப் பெற்றுள்ளன.
இதனால் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளன. இதனால் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிறுவும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உள்ளூராட்சி அதிகாரசபையாக கொழும்பு மாநகர சபை உள்ளது. இலங்கையின் மிகப்பெரிய நகரம் கொழும்பு என்பதுடன், நிதி மையமாகவும் உள்ளது. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பு மாநகரசைபையின் அதிகாரம் மிகவும் முக்கியமாகும். ஆனால், பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் வசமிருப்பதால் ஆளுங்கட்சி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.