நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 130 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. ஏனைய 209 சபைகளில் எதிர்கட்சிகளே அதிக ஆசனங்களை பெற்றுள்ளன.
255 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற அக்கட்சித் தவறியுள்ளது. அதேபொன்று 26 சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சம அளவிலான ஆசனங்களையே பெற்றுள்ளன.
இதேவேளை, 14 உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 40 சபைகளில் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சில சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.
அளிக்கப்பட்டு மொத்த வாக்குகளில் 43.3 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. 3841 ஆசனங்களையும் அக்கட்சி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 21.6 சதவீத வாக்குகளுடன் 1727 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
9.1 வாக்குளை பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 726 ஆசனங்களையும், 4.6 சதவீத வாக்குளை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி 371 ஆசனங்களையும், 3.6 சதவீத வாக்குளை பெற்றுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி 292 ஆசனங்களையும், 2.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 364 ஆசனங்களையும், 2.8 சதவீத வாக்குளை பெற்றுள்ள சர்வஜன அதிகாரம் கட்சி 224 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றுள்ள சபைகளில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் பேச்சுகள் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கூறினார்.