உலகளவில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வான பாப்பரசரை தெரிவுசெய்யும் மாநாடு, வத்திக்கானில் இன்று (07) ஆரம்பமாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து புதிய பாப்பரசரை தெரிவுசெய்வதற்காக கர்தினால்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
ரோம் நகரில் ஒன்றுகூடியுள்ள கர்தினால்கள், சிஸ்டைன் தேவாலயத்தில் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இந்த வாக்களிப்பில் 80 வயதிற்கு குறைவான கர்தினால்கள் மாத்திரமே வாக்களிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. அந்த வகையில், 133 கர்தினால்கள் இதில் வாக்களிப்பர். புதிய பாப்பரசரை தெரிவுசெய்யும்வரை இவர்கள் வெளியுலக தொடர்பினை துண்டிப்பர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றவரே அடுத்த பாப்பரசராக தெரிவுசெய்யப்படுவார். அது பெற்றுக்கொள்ளப்படும் வரை வாக்களிப்பு தொடரும் மற்றும் நாளொன்றிற்கு 4 தடவைகள் வாக்களிப்பு இடம்பெறும்.
ஒவ்வொரு நாளும் வாக்களிப்பு முடிந்த பின்னர், சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்பகுதியில் உள்ள புகை வெளியேற்ற வழியில் வெளியிடப்படும் புகையின் நிறத்தை வைத்தே புதிய பாப்பரசர் தெரிவுசெய்யப்பட்டாரா அல்லது வாக்களிப்பு அடுத்த நாள் தொடருமான என்பதை வெளியுலகம் அறிந்துகொள்ளும்.
கருப்புப் புகை வெளியேறினால் வாக்களிப்பு மறுநாள் தொடரும், வெள்ளைப் புகை வெளியேறினால் புதிய பாப்பரசர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது அர்த்தமாகும்.
கர்தினால்களில் வயது குறைந்தவராக உக்ரேனைச் சேர்ந்த மைகோலா பைசோக் உள்ளார். தற்போது அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இவருக்கு 45 வயது. இத்தாலியைச் சேர்ந்த 90 வயதான அஞ்செலி அசெர்பி, வயது கூடிய கர்தினாலாக உள்ளார். பத்திற்கு நான்கு கர்தினால்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் வாக்களிக்கும் கர்தினால்களில் சுமார் ஆறில் ஒரு பங்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் பாப்பரசர் பிரான்சிஸை தெரிவுசெய்யும் போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை விட, இந்த வாக்கெடுப்பு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
வாக்களிக்கும் 133 கர்தினால்களில் 108 பேர் மறைந்த பாப்பரசர் பிரான்சிஸால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.