கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் டில்ஷி அம்ஷிகா என்ற மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில், அதற்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை முன்பாக வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியை அந்த பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதற்கெதிராக அதிபர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையால் வேறு பாடசாலைக்குச் சென்றபோதும் அங்கும் அவரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அந்த மாணவி, மனஉளைச்சலுக்கு உள்ளாகி தனதுயிரை மாய்த்துக்கொண்டதாக பெற்றோரும் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களும் கூறுகின்றனர்.
இச்சம்பவத்திற்கு எதிராக சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தபோதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இன்று சம்பந்தப்பட்ட பாடசாலை முன்பாக ஒன்றுகூடிய ஏராளமான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்ய வேண்டும் என்றும், அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சுலோகங்களை ஏந்தி பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.