கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது. குறித்த மாணவி கல்விகற்ற பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில், ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும், அவர் கல்வி கற்கச் சென்ற மேலதிக வகுப்பில் இதுபற்றி ஏனைய மாணவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் கடந்த வருட இறுதியில் நடைபெற்று அதுகுறித்து பாடசாலை அதிபருக்கு அறிவித்த போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையே இதற்கு காரணம் என தெரியவருகின்றது. இந்நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாக குறித்த மாணவி ஏப்ரல் 29 அன்று தனதுயிரை மாய்த்துக்கொண்டார்.
பாடசாலை மீதான கண்டனங்கள்
குறித்த பாடசாலையின் அதிபரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பின்னர், அவர் இதுபற்றி நடவடிக்கை எடுக்காது பாடசாலையில் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் அதனால் வெளியில் கூறவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இறுதியாக அந்த மாணவி அங்கிருந்து விலகிச் சென்றபோது, ஏனைய மாணவிகளின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து இந்த மாணவி பாடசாலை மீது விண்பழி சுமத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். இவ்விடயங்களை, உயிரிழந்த மாணவிக்கு நடனம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் முகப்புத்தகத்தில் நேரடியாக தெரிவித்திருந்தார்.
அந்த ஆசிரியர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் சமூக வலைத்தள பக்கத்திற்குச் சென்று அவர் யாரென்றும் அந்த மாணவி அடையாளம் காட்டியுள்ளார். இதன் அடிப்படையில், பாடசாலை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, அதிபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தின் தொடர்பு
சம்பந்தப்பட்ட மாணவி மேலதிக வகுப்பிற்குச் சென்ற கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகர், இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர் ஏனைய மாணவர்கள் முன்னிலையில் இந்த மாணவியை தவறாக பேசியதே பிரச்சினை வலுவடைய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதால் இந்த விடயத்தில் அரசாங்கம் மெத்தனப்போக்காக செயற்படுகின்றதா என்ற கேள்விகளை மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
இந்த விடயம் நேற்று பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போது, அந்த மாணவி மனநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி தெரிவித்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அந்த பிள்ளை மன அழுத்தத்திற்கு உள்ளாகியமைக்கான காரணம், மற்றும் யார் காரணம் என்பதை ஆராயாமல் இவ்வாறு கதைக்க வேண்டாம் என குறிப்பிட்டார்.
அத்தோடு, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை தமது அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடு வழங்குமாறு அழைத்தபோதும் அவர்கள் வரவில்லை என அமைச்சர் சரோஜா குறிப்பிட்டார். எனினும், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர் வீட்டிற்கு நீங்கள் விசாரணை அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள் என மனோ குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக இன மத பேதமின்றி அனைத்து சமூக மக்களும் குரல்கொடுத்துள்ளதோடு, அமைச்சர் சரோஜாவின் பேச்சுக்கு கடும் கணடனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் இவ்வாறான பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என்றும், அவரை உடன் பதவி விலகுமாறும் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டமும் எதிரொலியும்
இச்சம்பவம் தொடர்பாக கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் புத்தளம் மாவட்ட பாடசாலை ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிபரை கல்வியமைச்சு விசாரணைக்கு அழைத்துள்ளது.
இந்நிலையில், துஷ்பிரயோகமோ துன்புறுத்தலோ செய்தால் அதற்கு தண்டனை வெறும் இடமாற்றமாக என்ற கேள்விகள் வலுப்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டத்தின் பின்னரே இந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது என அரசாங்கத்தின் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நேற்று அறிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் ஹரிணி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணை முடிந்ததும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், பொலிஸின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் பதில் முன்முயற்சியுடன் இருப்பதற்குப் பதிலாக எதிர்வினையாற்றுவதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஏனைய சிவில் சமூகக் குழுக்கள் விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதேபோன்ற துயரங்களைத் தடுக்க முறையான சீர்திருத்தங்களின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.