கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தை வழிநடத்தும்போது அவர் வலிமையையும் ஞானத்தையும் பெறவும் வாழ்த்தியுள்ளார்.
“உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொண்டு வரட்டும்” என்றும் இலங்கை மக்கள் சார்பாக அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி திசாநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
புதிய போப்பாக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் நேற்று வியாழக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
லியோ XIV என்ற பெயரைப் பெற்று, முதல் அமெரிக்க போப்பாண்டவராக ஆனார்.
சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை கிளம்பிய சுமார் 70 நிமிடங்களுக்குப் பின்னர் அவர், 1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு 133 கார்டினல் வாக்காளர்கள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கும் வகையில், செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மைய பால்கனியில் போப் லியோ தோன்றினார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் திகதி உயிரிழந்தார். ஹஅவரது உடல் 26ம் திகதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
அதன்பின்னர், புதிய போப் ஆண்டவரை தெரிவு செய்யும் பணிகள் நடைபெற்றன. சிஸ்டைன் ஆலயத்தில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடி தங்களுக்குள் ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தெரிவு செய்துள்ளனர்.
அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ரொபர்ட் பிரீவோஸ்ட் புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 69 வயதான ரொபர்ட் புதிய போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் போப் 14ம் லியோ (leo XIV) என்ற பெயருடன் தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். புதிய போப்பாக தெரிவுசெய்யப்பட்டுள்ள போப் 14ஆம் லியோவுக்கு உலக நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.