தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி, அண்மையில் கொழும்பில் பிரம்மாண்ட நிகழ்வினையும் நடத்தி சர்ச்சைக்குள்ளான ‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தனது கல்வி நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவரின் அந்தரங்க பகுதியில் குறித்த தனியார் கல்வி நிலைய ஆசிரியை நடத்திய தாக்குதலில், அந்த இளைஞனின் விதை பகுதி பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த ஆசிரியை தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து அவருடைய கணவரையும் முகாமையாளரையும் கட்டான பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த ஆசிரியை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பாரிய விழாவினை நடத்திய குறித்த ஆசிரியை, அதற்கு பொலிஸ் அதிகாரிகளையும் வாகனத்தையும் தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஏற்கனவே சர்ச்சைகளுக்கு உள்ளானார். இது தொடர்பான விடயம், ஏற்கனவே விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.