பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
நேற்றிரவு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதனையடுத்து பஞ்சாபின் அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடவடிக்கை தொடர்வதால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் பஞ்சாபின் 3 மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாகவே இராணுவ தாக்குதலை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் கூறுகின்றது.
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்றமான சூழலில் இது போன்று வெள்ளை நீரை திறந்து விடுவதன் மூலமாக இது பாகிஸ்தான் மீதான மற்றொரு தாக்குதலாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.