வீதி விபத்துக்கள் தொடர்கின்ற போதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

0
11
Article Top Ad

கொத்மலை பகுதியில் 21 உயிர்களை காவுகொண்ட பேருந்து விபத்தே இன்றைய நாளின் பேசுபொருளாக உள்ளது. நேற்றிரவு கதிர்காமத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, இன்று அதிகாலை கொத்மலை பகுதியில் விபத்திற்குள்ளாகியது. சுமார் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ள நிலையில், இந்த பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 35 பேர்வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அறிவிப்பு

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் இழப்பிடு வழங்கங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார். விபத்து குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றதோடு, அதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியது.

ஜனாதிபதியின் செய்தியும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டமும்

இந்த சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது விடாமுயற்சியுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களை செயற்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இதற்காக ஒரு திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கவனயீனம் காரணமா?

விபத்தினை தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்களில், பேருந்து சற்று வேகமாக பயணித்தாகவும் வளைவுகளின் போது சற்று தடுமாறியதாகவும் பேருந்தில் பயணித்த ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா இதற்கு காரணம் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மைய கால சம்பவங்கள்

நேற்றும் வெலிமடை, டயரபா பகுதியில் ஒரு பேருந்து விபத்து பதிவாகியுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்தார். சுமார் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஹபரணவில் பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்து 35 பேர் காயமடைந்தனர். ஜனவரி 29ஆம் திகதியன்று ஹபரண மின்னேரியா பாதையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 16 பேர் காயமடைந்தனர். ஜனவரி 26 அன்று காலி அக்குரஸ்ஸவில் பல்வேறு பேருந்து விபத்துக்களில் 29 பேர் காயமடைந்தனர். ஜனவரி 17 அன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உயிரிழந்து 19 வெளிநாட்டு பயணிகள் காயமடைந்தனர். மார்ச் 27 அன்று  ஹொரணை-இரத்தினபுரி வீதியில் பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில் பதினைந்து பாடசாலை சிறார்களும் மூன்று பெற்றோர்களும் காயமடைந்தனர்.

இவை வெறும் அண்மித்த தகவல்கள் மாத்திரமே. 2021ஆம் ஆண்டின் உலக வங்கி தரவுகளில், இலங்கையில் வருடாந்தம் 38,000 வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், 3,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் 8,000 பேர் காயமடைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் பாரிய விபத்துச் சம்பவங்களுடன் பேருந்துகளே தொடர்புபட்டுள்ளன. இதற்கு சாரதிகளின் கவனயீனம், பேருந்துகளுக்கு இடையிலான போட்டி, முறையற்ற வீதிப் பராமரிப்பு, பேருந்துகளை முறையாக பராமரிக்காமை என பல காரணங்கள் காணப்படுகின்றன.

பொலிஸ் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின் பிரகாரம், 2016ஆம் ஆண்டுமுதல் சராசரியாக தினமும்  எட்டு பேர் வீதி விபத்துக்களில் மரணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2016 முதல் ஜூன் 30, 2023 வரையிலான ஏழரை ஆண்டுகளில் மொத்தம் 223,451 விபத்துகளில் 20,728 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

வீதி பாதுகாப்பு முகாமைத்துவத்தில் காணப்படும் வினைத்திறனற்ற நிலையையே இவை பிரதிபலிக்கின்றன. இதுகுறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது அவசியம்.

வீதி விபத்துகள் உயிர்களை மட்டுமல்ல, குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் நீடித்த வடுக்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், முறையான வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடுமையான சட்ட அமுலாக்கம் மற்றும் சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அதிக விழிப்புணர்வு போன்றவற்றை துரிதமாக மேற்கொள்வது அவசியம்.  ஒவ்வொரு உயிரும் முக்கியமானது – எமது பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு கூட்டு முயற்சி முக்கியமாகும்.

செய்தியாக்கம் – கே.கே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here