பலனளிக்குமா சீன-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை?

0
7
Article Top Ad

படம் – AFP

வர்த்தகப் போர் என்று அழைக்கப்படும் அமெரிக்க-சீன வரி மோதல், 2025ஆம் ஆண்டில் கடுமையாக அதிகரித்துள்ளது.  இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் கீழான அமெரிக்கா, சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145% ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு 125% வரிகளுடன் பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாற்றப்படும் பொருட்களின் விலையை முன்னரை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்திருப்பதால் அவை வர்த்தகத் தடைக்கு சமமானவை என்று பொருளாதார வல்லுநர்கள் விவரித்துள்ளனர்.

தற்போதைய பேச்சுவார்த்தை

அமெரிக்க சீன பரஸ்பர வரிவிதிப்பினால் ஏற்பட்ட இந்த வர்த்தக பதட்டங்களை தணிக்கும் வகையில், சுவிட்சர்லாந்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் சீனாவின் துணைப் பிரதமர் ஹீ லைஃபெங்கை சந்தித்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு விரைவில் இணைந்த அறிக்கையொன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், குறுகிய காலத்தில் ஒரு விரிவான வர்த்தக உடன்பாடு சாத்தியமா என்பது கேள்விக்குறியாகும்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

முதல்நாள் பேச்சுவார்த்தையின் பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிகவும் நட்புரீதியான பேச்சுவார்த்தை என குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆக்கப்பூர்வமான முறையிலேயே மறுசீரமைப்பு இடம்பெறும் என குறிப்பிட்டிருந்தார்.

உலகளாவிய எச்சரிக்கை

அமெரிக்காவும் சீனாவும் இணைந்து உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பங்கைக் கொண்டிருப்பதால், மற்ற நாடுகள் இந்த சர்ச்சையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்வேறு ஆய்வாளர்கள் வர்த்தகப் போர் உலகளாவிய பொருட்கள் வர்த்தகத்தை சுமார் 0.2% குறைத்து சர்வதேச சந்தைகளை சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

சில நாடுகள், மற்றவர்களால் வழங்க முடியாத பொருட்களை வழங்குவதன் மூலம் குறுகிய காலத்திற்கு பயனடையக்கூடும். ஆனால் நீண்ட காலத்திற்கு, வர்த்தகத்தில் கூடுதல் வரிகளின் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆபத்து உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க-சீன வரி பிரச்சினை உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு ஒரு முக்கிய மூலமாக உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள மக்கள், வணிகங்கள் மற்றும் நாடுகளைப் பாதிக்கிறது. சமீபத்திய பேச்சுவார்த்தைகள் பதட்டங்களைத் தணிப்பதற்கான நம்பிக்கையை அளித்தாலும், ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கான பாதை நீண்டதாகவும் சிக்கலானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

செய்தியாக்கம் – கே.கே.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here