வெசாக் தினம் – அதிகாரிகள் வாழ்த்து – கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
8
Article Top Ad

பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர். தர்மத்தை நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து,  அனைத்து பாவங்களையும் அழித்து, புத்த பெருமான இந்நாளிலேயே உண்மையான ஞானம் பெற்றார் என கூறப்படுகின்றது. அதனைக் குறிக்கும் வகையிலேயே வெசாக் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வாழ்த்து

போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என ஜனாதிபதி தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி “வளமான நாடு – அழகான வாழ்க்கை” பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். என்றும் அவர் வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

பிரதமரின் வாழ்த்து

எமது நாடு சரியான மாற்றத்தை நோக்கி பயணித்து வரும் இச்சந்தர்ப்பத்தில், மனித உள்ளங்களை ஆற்றுப்படுத்த இந்த வெசாக் காலம் மிகவும் பொருத்தமானது என்பது எனது நம்பிக்கையாகும். அந்த நோக்கத்திற்காக நாம் அனைவரும் ஒருமனதுடனும் ஒற்றுமையாகவும் கைகோர்ப்போம் என எனது இந்த வெசாக் செய்தியின் ஊடாக உங்கள் அனைவரையும் அழைக்க இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் போர்ச் சூழல்கள் தணிந்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக வேண்டும் என்று அனைத்து இலங்கையர்களுடனும் சேர்ந்து நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.  சிறு குற்றங்களை செய்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்தவர்கள் ஆகியோருக்கே இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைக் கைதிகளை இன்றும் நாளையும் உறவினர்கள் சந்திப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here