கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்திற்கு இயந்திரக் கோளாறு காரணம் அல்ல என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றமை மற்றும் உறக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. விபத்தின் போது பேருந்தில் 81 பேர் பயணித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போது விசேட நிபுணர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் உறுதியான காரணம் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேருந்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், கதிர்காமம் டிப்போவின் விசாரணை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் நேற்று (12) அங்கு சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது.காயமடைந்த சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு, சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.