உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதை யாராவது தடுத்தால், அவற்றை எதிர்கொள்ள சட்டத்தில் போதுமான இடமுண்டு என்றும், அந்த முயற்சி தோல்வியுற்றால், அரசியல் யாப்பு திருத்தம் வரை சென்று அதனை வெற்றிகொள்ள போதுமான பாராளுமன்ற பெரும்பான்மை உண்டு என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘மக்கள் ஆணை’ என்ற வார்த்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நகர சபைகளில் அதிகாரம் தன்னிச்சையாக தீர்மானிக்கப்படலாம் என்று நம்பும் குழுக்கள் உள்ளன. அது ஒன்று அல்லது இரண்டு தனிநபர்களின் கைகளில் குவிக்கப்படலாம் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். இலங்கையில் முதல் முறையாக 267 பிரதேச சபைகளை நாம் வெற்றி பெற்றுள்ளோம் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அந்தவகையில், வெற்றிபெற்ற ஒவ்வொரு சபையிலும் ஆட்சியமைக்கும் மக்கள் ஆணை தமக்கு உள்ளதென்றும், அதன்படி செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.