பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் நடைபெற்ற இவ்விசாரணையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரி ஒருவர், சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்கு சொந்தமான நிலையான வைப்பு நிதிக் கணக்கிலிருந்த பணத்தை அவை காலாவதியாகும் முன்னர் திரும்பப்பெற்று, அரசாங்கத்திற்கு ரூ.17.6 மில்லியனுக்கும் மேற்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு தான் பிரதமராக இருந்தபோது, மாகாண சபைகள் நிலையான வைப்பு நிதியை காலாவதியாகும் முன் பெற அனுமதிக்கும் சுற்றறிக்கை ஒன்றை திறைச்சேரி ஊடாக வெளியிட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே சாமர சம்பத் செயல்பட்டதால், அது சட்டவிரோதம் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த சுற்றறிக்கை 2016 நவம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது என்றும், சாமர சம்பத் தசநாயக்க 2016 பெப்ரவரி 29 ஆம் திதியில் பணத்தை திரும்பப் பெற்றதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரி விளக்கினார். எனவே, அவர் பணத்தை பெற்றபோது அத்தகைய சுற்றறிக்கை எதுவும் இல்லை என்று அதிகாரி வலியுறுத்தினார்.
மேலும், ரணில் விக்ரமசிங்கவிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றதாகவும், அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அந்த சுற்றறிக்கையின் வெளியீட்டு திகதியை அறியாமல் அவ்வாறு கருத்துத் தெரிவித்தமை தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைச் செயன்முறைகளை பாதித்ததாக அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், சாமரவின் பிணையை ரத்து செய்து, அவரை தடுப்புக் காவலில் வைக்கவேண்டும் என கோரப்பட்டது.
எனினும், அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அவர் மற்றுமொரு குற்றச்சாட்டிற்காக ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.