இலங்கையில் சுமார் 3 தசாப்த காலமாக நீடித்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதேபோன்ற நாளில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைத்து வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை பிதிர்க்கடன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னாரிலும் நினைவேந்தல் இடம்பெற்றதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. அத்தோடு, மட்டக்களப்பின் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்தோடு, கொழும்பு வெள்ளவத்தையிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒரு குழுவினர் பிரச்சினை ஏற்படுத்தியபோதும், பொலிஸாரின் தலையீட்டுடன் நிலைமை சுமூகமானது.
மேலும், லண்டன், லெஸ்டர், பர்மிங்ஹாம், ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில், புலம்பெயர் அமைப்பான தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இரத்த தான நிகழ்வினையும் முன்னெடுத்திருந்தது.
அத்தோடு, தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது, “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கையூட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று, முள்ளிவாய்க்கால் நினைவுதினமான இன்று உறுதி ஏற்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில், அரசாங்கம் நாளைய தினம் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.