நாட்டில் நடக்கும் பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் படைவீரர்கள் தொடர்புபட்டுள்ளமை குறித்து பொலிஸாரும் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இப்போது கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டு சூத்திரதாரி முன்னாள் விமானப்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி தெஹிவளை – கல்கிஸ்ஸ பகுதியில் மாநகர சபை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 19 வயதான இளைஞன் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துரத்தி துரத்தி சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் இதற்கு உதவிய இன்னொருவரும் கடந்த 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டினை நடத்திய பிரதான சூத்திரதாரி இன்று (19) கொட்டாவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளும் கைப்பற்றப்பட்டன. குறித்த நபர் இலங்கை விமானப்படையில் பணியாற்றிவிட்டு, ஒன்றரை வருடங்களின் பின்னர் தப்பியோடியவர் ஆவார்.
அண்மைய காலமாக இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் இவ்வாறு முப்படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை கைதுசெய்யுமாறு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்ததோடு, பெப்ரவரி 22முதல் மார்ச் 19 வரை 1604 பேர் அவ்வாறு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.