அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக வடக்கிலும் தெற்கிலும் மீண்டும் இனவாதம் தலைதூக்கியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வில் நேற்று (19) கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்
“நாம் போதுமான அளவு இரத்தம் சிந்தியிருக்கிறோம். இந்த மண்ணை ஈரமாக்கும் அளவுக்கு இரத்தம் சிந்திய தேசம் நாம். ஆறுகள் இரத்தத்தால் நிரம்பி வழியும் அளவுக்கு இரத்தம் சிந்திய தேசம் நாம். தாய்மார்கள், தந்தையர்கள், பெற்றோர்களின் கண்ணீர் ஆறுகளை நிரப்பும் அளவுக்கு கண்ணீர் சிந்திய தேசம் நாம். யுத்தத்தின் மிக மோசமான வேதனைகளையும், மிகக் கொடூரமான அனுபவங்களையும் பெற்ற மக்கள் நாம். இவை அனுபவங்களாக இருந்தால், மீண்டும் இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.
யுத்தத்தை வெற்றிகொண்ட போதும் சமாதானம் கிடைக்கவில்லை. நாம் முழுமையான வெற்றியாளர்கள் அல்ல. நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும். எனவே, சமாதானத்திற்காக எடுக்கக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க நாம் தயாராக இருக்கிறோம்.
மீண்டும் யுத்தம் குறித்த அச்சம் இல்லாத சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். இது மிகவும் கடினமான முயற்சி என்பது எனக்குத் தெரியும். ஆனால், எவ்வாறேனும் இந்த முயற்சியில் நாம் வெற்றியடைய வேண்டும். வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
உண்மையான தாய்நாட்டு சுதந்திரம் என்றால், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் தாய்நாட்டின் முழுமையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை. தாய்நாட்டின் முழுமையான சுதந்திரம் என்றால் என்ன? இன்றும் மழை பெய்யத் தொடங்கும் போது, நாம் அச்சப்படுகிறோம். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் 4,900 வீடுகள் உள்ளன. எந்தப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளது என்ற அச்சம் இருக்கிறது. இதனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? உலகில் எங்கேனும் ஒரு மோதல் ஏற்பட்டால், நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் இருக்கிறது.
இன்று நாம் பொருளாதார இறையாண்மையை இழந்த நாடாக இருக்கிறோம். நமது பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கு வலிமை இல்லாத தேசம் நாம். எனவே, இந்த தாய்நாட்டை உலகின் முன் பெருமையுடன் நிற்கும் நாடாக மாற்றுவதற்கு, இந்த பொருளாதார மாற்றத்தை நாம் அடைய வேண்டும்.
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், சட்டத்தின் ஆட்சியை இந்த நாட்டில் நிலைநாட்ட வேண்டும். நமது நாட்டின் ஆட்சி முறைமை குறித்து உலகம் பாராட்டி பேச வேண்டும். குற்றங்கள், போதைப்பொருள், தொற்று நோய்களற்ற நாட்டை நாம் உருவாக்க வேண்டும். மோதல்கள் இல்லாத, வெறுப்பு இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அங்கே தான் நமக்கு முழுமையான சுதந்திரமும், தாய்நாட்டின் வலிமையான இறையாண்மையும் உருவாகும்” என கூறியுள்ளார்.