ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்களுக்கு சொந்தமாக குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணையின்போது பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன.
எனினும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன். அத்துடன் இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?’ வேறு நாட்டிற்கு செல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ” ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான 10 கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்கின்ற நிலம் தான் தமிழ்நாடு எனவும், இது இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது எனவும், இதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் அதிக அளவு வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு ஆகும். அங்கு வாழும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும், சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சீனாவின் ஒரு பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இந்திய நாட்டில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கும்போது தடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும், கல்வி, விளையாட்டுஇ,அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில் இரட்டை குடியுரிமை அல்லது தற்காலிக குடியுரிமை என்று ஏதாவது ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கோடிக்கணக்கான மக்களின் இறுதி நம்பிக்கையாய் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனவும்,இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்ட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்