உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வாழ்க்கையை மறுவரையறை செய்யும் குறிக்கோளுடன் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து அமைப்புகள், ஸ்மார்ட் வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி என அனைத்திற்கும் இந்த நகரம் AI-அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவின் முழு திறனையும் பயன்படுத்தும் ஒரு நகரத்தை அபுதாபி திட்டமிட்டுள்ளது. இந்த AI ஸ்மார்ட் நகரத்தின் பெயர் ‘அயன் சென்சியா’ ஆகும்.
இந்த நகரத்தை அபுதாபியை தளமாகக் கொண்ட போல்ட் டெக்னாலஜிஸ் மற்றும் இத்தாலிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் மி ஆன் ஆகிய நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றனர்.
அயன் சென்சியா ஸ்மார்ட் நகரமாக மட்டுமல்லாமல், அறிவியல் நகரமாகவும் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் மரினெல்லி கூறினார்.
கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் என்ற மாதிரியில் கட்டமைக்கப்படும் இந்த நகரத் திட்டத்தின் செலவு 250 மில்லியன் டொலர் ஆகும். AI கையடக்க தொலைபேசி செயலியான MAIA, நகரத்தில் வசிப்பவர்களை இணைத்து ஈடுபடுத்தும்.
இது அனைத்து சேவைகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் ஒரு அமைப்பாக இருக்கும். பாரம்பரிய AI தளங்களைப் போலன்றி, இந்தப் பயன்பாடு பயனர்களைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் தளமாக இருக்கும்.
இந்த செயலி, வருடத்தில் இரவு உணவிற்கு எங்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை பயனருக்கு பரிந்துரைக்கும் என்றும், பயனரை குழப்பமடையச் செய்யாமல் தானாகவே முன்பதிவு செய்யும் என்றும் டேனியல் மரினெல்லி விளக்கினார்.
இந்த செயலி, இயக்கம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
AI இன் உலகளாவிய தலைமையகமாக மாறுவதற்கான அபுதாபியின் முயற்சிகளுக்கு அயன் சென்சியா பங்களிக்கும். ஓபன் AI உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அபுதாபியில் AI துறையில் முதலீடு செய்கின்றன.