அரசாங்கம் கைவிட்டாலும், தேசிய போர் வீரர் நினைவு தினத்தை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
போர் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் தேசிய போர் வீரர் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகனான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும், மொட்டு கட்சி செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச,
“ எதிர்காலத்தில் படைவீரர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. அரசாங்கங்கள் செய்யாவிட்டாலும் நாட்டு மக்கள் அதை நிச்சயம் அனுஷ்டிப்பார்கள்.
சமாதானத்துக்காகவே போர் முன்னெடுக்கப்பட்டது. போர் என்பது பேரவலம்தான் என்ற ஜனாதிபதியின் கருத்து ஏற்கக்கூடியது.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.”- என்று குறிப்பிட்டார்.