தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொடிய யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்றன. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வித மாற்றமும் கடந்த காலங்களில் தொடர்ந்தன. கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இந்நிலைமை படிப்படியாக மாறிவருகின்றது. தமிழ் மக்களுக்கு நம்பகமான அரசாங்கம் உருவாகியுள்ளது. அவ்வாறான அரசாங்கத்துடன் தமிழ் மக்கள் கைகோர்த்துவருகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் எமக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினர்கள்கூட இருக்கவில்லை. இன்று 81 உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். யாழ். உட்பட வடக்கில் வாழும் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக எம்மை மக்கள் உயர்த்தியே வைத்துள்ளனர்.
தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்காக தமிழ்க் கட்சிகளிடம் உள்ள திட்டங்கள் என்ன? எவ்வித திட்டங்களும் இல்லை. காவாளித்தனமான செயற்பாடுகளே கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது முன்னெடுக்கப்பட்டது. கடுமையாக இனவாதம் பேசப்பட்டது. பணம் பறிமாற்றப்பட்டது. மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டன. மிகவும் கேவலமான முறையில் நடந்தே வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் உண்மையான அபிலாஷைகள் வெளிப்படவில்லை.” – என்றார்.