நல்லூர் புனித பூமியில் திறக்கப்பட்ட பரிஸ்டாவின் கிளைக்கு எதிர்ப்பு

0
3
Article Top Ad

சைவத் தமிழர்களின் ஆலயம் அமைந்துள்ள புனித பூமியில் திறக்கப்பட்டுள்ள சொகுசு உணவகத்தின் பெயர்ப் பலகையை அகற்ற யாழ்ப்பாண மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் புதிதாக நிறுவப்பட்ட பரிஸ்டா (BARISTA) உணவகத்தின் பெயர்ப் பலகையை, உள்ளூர்வாசிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மே 22ஆம் திகதி அகற்ற யாழ்ப்பாண மாநகர சபை நடவடிக்கை எடுத்தது.

யாழ்ப்பாண மாநகர சபையில் முறையான அனுமதிப் பெறுமாறு கூறி, அதன் பெயர்ப்பலகை அகற்றப்பட்ட பரிஸ்டா கோப்பி கடையின் புதிய கிளை, யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திலுப பதிரண பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், பணிப்பாளராகவும் இருக்கும் இலங்கையில் 60 கிளைகளைக் கொண்டுள்ள, பரிஸ்டா கோப்பி லங்கா பிரைவேட் லிமிடெட்டின் (Barista Coffee Lanka Pvt Ltd), பொதுமக்களின் எதிர்ப்பிற்கு உள்ளான பருத்தித்துறை வீதி கிளைக்கு மேலதிகமாக, யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் மற்றுமொரு கிளையும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆசிரமத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சைவ சிவ பக்தர்களால் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள பரிஸ்டா உணவகத்தை உடனடியாக அகற்றுமாறு கோரி கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மே 20 அன்று நல்லூர் கோயில் முன் எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்த சைவத் தமிழர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபை வரை சென்று இந்த உணவகத்தை உடனடியாக அகற்றக் கோரினர். மே 21 அன்று, நூற்றுக்கணக்கான கையெழுத்துக்கள் கொண்ட கடிதத்தை மநாகர ஆணையாளரிடம் ஒப்படைப்பதன் மூலம் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்த உணவகம் இன, மத சகவாழ்வுக்கு தடையாக இருப்பதாக யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆசிரமத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவிக்கின்றார்.

“நல்லூர் புனித பூமியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அசைவ உணவகத்தை மூடக் கோரி மாநகர ஆணையாளரிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளோம். தெற்கில் ஒரு பல்தேசிய அசைவ உணவகத்தின் கிளையை நிறுவுவதன் மூலம் இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு சட்டவிரோத செயலாகவே நல்லூர் சமூகத்தினராகிய நாங்கள் கருதுகின்றோம்.”

போராட்டக்காரர்களால் மாநகர ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மிகப்பெரிய கோப்பி உணவகச் சங்கிலிகளில் ஒன்றான பரிஸ்டாவின் இரண்டாவது கிளை, மே 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் முறையான அனுமதியின்றி அந்த இடத்தில் உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆசிரமத்தைச் சேர்ந்த தவத்திரு வேலன் சுவாமி, மே 13 ஆம் திகதி யாழ்ப்பாண நகராட்சி அதிகாரிகள் உணவக நிர்வாகத்திற்கு வாய்மொழியாக உணவகத்தை உடனடியாக வளாகத்திலிருந்து அகற்றுமாறு தெரிவித்ததாகக் கூறுகிறார், அதே நாளில் அதே கோரிக்கையை நிறுவன அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தான் அனுப்பியதாகவும் கூறுகிறார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலில் இருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் இந்த உணவகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அந்த பிரதேசம் கோயிலின் புனித பூமியில் உள்ளடங்கும் பிரதேசம் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here