Article Top Ad
மருந்து கொள்வனவு செயன்முறையை கடந்த அரசாங்கம் முறையாக முன்னெடுக்காமையே தற்போது வைத்தியசாலைகளில் மருந்து நெருக்கடிக்கு காரணம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் விளைவுகளால் நோயாளர்கள் இன்று அவதிப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 65 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், 35 சதவீதமானவையே நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வருடத்தின் பயன்பாட்டுக்கான மருந்துகளில் 67 வகையான மருந்துகளுக்கு மாத்திரமே கடந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் முந்தைய அரசாங்கம் பொருட்கோடலை சமர்ப்பித்திருந்தது. ஆகவே, இந்த கொள்வனவு செயன்முறைக்கு கால அவகாசம் தேவைப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச சுகாதார அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கைக்கு ஓர் உயர்வான இடம் உள்ளதுடன், அதனைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.