Article Top Ad
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக தற்போதைய அரசாங்கம் எதையும் தெரிவிக்காததன் மூலம், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய கொள்கைகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் பற்றி தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்த போதிலும் அவை நடைமுறைக்கு வருமா என்பதும் அவற்றின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுமா என்பதும் கேள்வியாகவே உள்ளது. அவ்வாறானதொரு அரசாங்கத்துடன் தமிழ் தரப்பினர் இணைந்து செயற்படுவது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.
இப்படியான சூழ்நிலையில், தமிழ் தரப்பினர் ஒன்றாக இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் மக்களின் கருத்துக்கள் அரசாங்கத்தைப் பொறுத்தவரை செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்றே காணப்படும் என்றும், தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.