இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்?
75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.
ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், அரசாங்க தரப்பில் இதற்கு இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.