கொழும்பில் மினி சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை

0
171
Article Top Ad

கொழும்பின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் அவ்வப்போது பலத்த காற்று வீசி வருவதோடு, பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இன்று (30) பிற்பகலும் பலத்த காற்று வீசி, பிரதான பாதைகளின் ஓரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீதியில் வீழ்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளின் மின்தடையும் பதிவாகியுள்ளது.

மேலும், 9 மாவட்டங்களில் மழை மற்றும் காற்று நிலைகளால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. தற்போது 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 365 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமாக இருப்பதால், இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை அந்தக் கடல் பகுதிகளுக்கு அருகில் படகில் செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.  நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அதிகரித்த தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.