இலங்கையில் மதுபான உரிமங்கள் வழங்குவது தொடர்பான சமீபத்திய சர்ச்சை, உயர்நீதிமன்ற அறிவிப்புடன் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, மதுபான உரிமங்களை வழங்குவதன் மூலம் கலால் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவருக்கெதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெறுவதற்காக இந்த உரிமங்கள் அரசியல் சலுகைகளாக வழங்கப்பட்டதாகவும், இதனால் நிர்வாகம், சட்டபூர்வமான தன்மை மற்றும் நெறிமுறைகள் பற்றிய வலுவான விவாதம் ஏற்பட்டதாகவும் மனுக்கள் கூறுகின்றன.
உயர்நீதிமன்ற தலையீடு மற்றும் சட்ட நடவடிக்கைகள்
நீதியரசர்களான யசந்த கோட்டகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த மனுக்களை விசாரிப்பதற்கு நேற்று அனுமதி வழங்கியது. இந்த மனுக்களை மாத்தளையைச் சேர்ந்த வர்த்தகர் தங்கவேலு தனேந்திர ராஜா உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் மதுவரி ஆணையாளர் எம்.ஜே. குணசிறி உள்ளிட்ட பலர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, சட்டத்துக்குப் புறம்பாக மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை பிரதிவாதிகள் வழங்கியுள்ளதாகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் 19 வயது மகனுக்கும் மதுபான சாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வழக்கு தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்த நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் திகதியிட்டது.
அரசியல் இலஞ்சத்திற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதா?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் 19 வயது மகனுக்கும் மதுபானசாலை உரிமம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை, இவ்விடயம் குறித்த பாரதுரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த உரிமங்கள் அரசியல் விசுவாசத்திற்கு வெகுமதி அளிப்பதன் மூலம் தேர்தல் முடிவை பாதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர். 2024ஆம் ஆண்டில் 361 மதுபான உரிமங்களை ரணில் அங்கீகரித்ததாகவும், அவற்றில் 172 உரிமங்கள் குறுக்குவழிகளை ஊக்குவிப்பதற்கும் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெறுவதற்கும் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட பெரும்பாலான உரிமங்கள் மேல்மாகாணத்திலேயே விநியோகிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினதும் முன்னாள் ஜனாதிபதியினதும் பதில்கள்
இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம், அனைத்து உரிமங்களும் கலால் துறை விதிமுறைகளுக்கு இணங்க வழங்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தால் சரிபார்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புதிய மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அரசுக்கு ரூ. 3.1 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளதாக அலுவலகம் வலியுறுத்தியது. இந்த உரிமங்களை புதுப்பிக்க அல்லது ரத்து செய்ய தற்போதைய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் அது குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரணில் நிர்வாகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கலால் கட்டணங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மது ஆலைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான உரிமக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன, இதன் விளைவாக 2023இல் ரூ.200 மில்லியனிலிருந்து ஒக்டோபர் 2024இல் ரூ. 3.1 பில்லியனாக வருவாய் பெருமளவில் அதிகரித்தது. வருவாய் அதிகரிப்பை அரசாங்கம் வரவேற்றாலும், ஊழல் மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால் அது மறைக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் தனிநபர் அல்லது அமைப்புக்கு உரிமங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் கூற்றுகளும் இதில் அடங்கும்.
விசாரணைக்கான அவசியம்
மதுபான உரிம சர்ச்சை, கலால் துறைக்குள் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்களின் ஒரு பெரிய வடிவத்தின் ஒரு பகுதியாகும். இதில் உரிமம் வழங்குவதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றும் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான வரி வருவாய் இழப்பு ஏற்பட்ட ஒரு பெரிய போலி கலால் ஸ்டிக்கர் ஊழல் ஆகியவை அடங்கும். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக குழுக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்துகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் உள்ள தற்போதைய நிர்வாகம் இவற்றை விசாரிப்பதாக உறுதியளித்துள்ளதோடு, உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பும் இதற்கு வலுசேர்த்துள்ளது. இந்த வழக்கு இலங்கையில் நிர்வாக பொறுப்புக்கூறல் மற்றும் தேர்தலின் சுயாதீனத்தன்மைக்கு ஒரு சோதனையாகவே அமையும்.
செய்தியாக்கம் – கே.கே.

