இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளை கைப்பற்றியுள்ளபோதும் சில சபைகளில் ஆட்சியமைப்பதற்கு போதுமான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், ஏனைய கட்சிகளின் ஆதரவை கோரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் நேற்று இரு தரப்பினரும் சந்தித்துக் கொண்டமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கையை பரிசீலிப்போம்
உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு வழங்க வேண்டும் என்றுநேரில் வந்து தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடி விடுத்துள்ள கோரிக்கையை ஈ.பி.டி.பி. பரிசீலிப்பதாக டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவே விரும்புவதாக ஏற்கனவே டக்ளஸ் குறிப்பிட்டிருந்தார்.
எனக்குத் தெரியாது
குறித்த சந்திப்பு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக் குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தமிழ் தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது. அவ்வாறு இருக்கும்போது, தமிழ் தேசியத்திற்கு விரோமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில் அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கண்டனம்
டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம். கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் எதனையும் நாம் ஏற்கவும் முடியாது அனுமதிக்கவும் முடியாது.
டக்ளஸ் மற்றும் சிவஞானம் ஐயா அவர்கள் சந்திப்பிற்கு கட்சி பொறுப்பேற்க முடியாது என்பதுடன் இதனை எனது தனிப்பட்ட முடிவின் அடிப்படையில் வன்மையான எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்“ என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் என்ன கூறுகின்றனர்?
தமிழரசின் யாப்பின் படி கொள்கை ரீதியான முடிவு எடுப்பது என்றால் பொதுச்சபையை கூட்டி தீர்மானிக்க வேண்டும். EPDP இடம் ஆதரவு கேட்டது கொள்கை ரீதியான முடிவு. மத்தியகுழுவில் இருக்கும் தமது அடிமைகளை வைத்து தீர்மானிக்க முடியாது என மக்கள் முகப்புத்தகத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு, சிவஞானம் வெறும் அம்புதான் என்றும், எய்தவனை பிடியுங்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வில் சிவஞானம், சுமந்திரன், டக்ளஸ் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு காணொளியை மீளவும் பகிர்ந்துவரும் மக்கள், அதில் டக்ளஸ் அருகில் வருவதற்கு பயமாக உள்ளது என சுமந்திரன் கூறுவதையும், “எல்லோருக்கும் பொட்டை போட்டு விடுங்க என்று டக்ளஸ் கூறியதையும்“ சுட்டிக்காட்டி நகைப்புக்குள்ளாக்கியும் வருகின்றனர்.
செய்தியாக்கம் – கே.கே.