தேனீக்களின் மூளையை நேரடியாக கட்டுப்படுத்தி, அவற்றை தேவையான இடங்களுக்குப் பயணிக்கச் செய்வதற்கான புதிய முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நவீன முயற்சி, உயிரினங்களை கருவிகள் மூலம் இயக்கும் “சைபோர்க் தொழில்நுட்ப” (Cyborg Technology) ஆய்வின் ஒரு பகுதியாக அமைகின்றது.
சீனாவின் பீஜிங் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தேனீக்களின் இயக்கத்தை துல்லியமாகக் கட்டுப்படுத்த 74 மில்லி கிராம் எடையுடைய சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியில் உள்ள நுண்ணிய ஊசிகள், தேனீக்களின் மூளை நரம்புகளை தூண்டி, அவற்றை நியமிக்கப்பட்ட திசைகளில் நகர்த்தும் திறனை வழங்குகின்றன.
குறிப்பாக, எந்த இடத்திலிருந்தும் இந்த கருவி வழியாக தேனீக்களின் இயக்கத்தை கண்காணிப்பதற்கும், அவற்றின் செயல்களை நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வசதியும் கொண்டுள்ளது. இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளில், விஞ்ஞானிகள் கொடுத்த உத்தரவுகளை 90% அளவில் தேனீக்கள் பின்பற்றியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேனீக்கள், இயற்கை பேரிடர்கள் அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு அனுப்பி, அங்குள்ள சூழலை ஆய்வு செய்யவும் உபயோகப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தேனீக்களை உளவுத்துறையின் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என கருத்துகள் வெளியாகியுள்ளன.
உலகின் பல்வேறு நாடுகள் சைபோர்க் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வரும் நிலையில், சீனாவின் இச்செல்வாக்கு முயற்சி புதிய ஆய்வுகளுக்கு முன்னோடியானதாகப் பார்க்கப்படுகிறது.

